பேரவைத் தலைவர் தொகுதியில் பேயாட்டம் போடும் குவாரிகள்!

ஆளும்கட்சிக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் மக்கள்
நெல்லை குவாரி விபத்து
நெல்லை குவாரி விபத்து படம்: லெட்சுமி அருண்

நெல்லை கல் குவாரி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் குவாரிக்குள் நிகழும் விபத்துகள் மட்டுமா பிரச்சினை? அத்துமீறி கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்து விடுவதால், சுற்றுவட்டாரத்தில் விவசாயமும் பாதிக்கப்படுவதாக அவலக்குரல் எழுப்புகிறார்கள் மக்கள்!

குவாரிக்கு எதிராக போராடும் சங்கரலிங்கம்...
குவாரிக்கு எதிராக போராடும் சங்கரலிங்கம்...

கல் குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து அதை 15 லட்சமாக உயர்த்தினார். இதைச் சுட்டிக்காட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை, “அரசு மீது தவறு இருப்பதாலேயே நிவாரணத் தொகையை அதிகரித்திருக்கிறார்கள்” என்று அதிரடி கிளப்பினார். அரசு மீது தவறு இருக்கிறதோ இல்லையோ நெல்லை பகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ்காரர்கள் வசமே பெருவாரியான குவாரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். விபத்து ஏற்பட்ட அடைமிதிப்பான் குளம் குவாரியின் உரிமையாளர் செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவருக்கு சபாநாயகர் அப்பாவுவின் ஆசி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக எம்.பி-யான ஞானதிரவியத்தின் பெயரைச் சொல்லி பல குவாரிகள் புற்றீசல் போல் முளைத்துவருகின்றன. இருக்கன் துறை, உதயத்தூர், பரமேஸ்வரம் சுற்றுவட்டாரத்தில் இது மிதமிஞ்சி நடக்கிறது. இது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயி சுந்தரலிங்கத்திடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

”எங்கள் கிராமங்களுக்கு பக்கத்திலேயே ஏற்கெனவே பல குவாரிகள் இயங்கிவருகின்றன. இதனால் விவசாயம் அழிந்து வருவதோடு, மக்களின் இயல்புவாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளில் பாறைகள் வெடிவைத்து உடைக்கும்போது, ஊருக்குள்ளும் அதிர்வுகளை உணர்கிறோம். வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படும் போது விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும் சேதமடைகின்றன.

ஞானதிரவியம்
ஞானதிரவியம்

இந்த நிலையில், ஆளும் கட்சி பிரமுகர்கள் தங்களது பினாமி பெயரில் புதிதாக கல் குவாரி மற்றும் கிரஷர்களை அமைக்க முயற்சிக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த பலகட்ட போராட்டங்கள் நடத்திவிட்டோம். அரசு அதிகாரிகளுக்கு மனுமேல் மனுபோட்டும் உரிய பதில் இல்லை. கடந்த டிசம்பர் மாதம், விதி மீறிய குவாரிகளை ஆய்வு செய்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி பல குவாரிகளுக்கு அனுமதி மறுத்தார். புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுக்காமலும் கிடுக்குப்பிடி போட்டார். அப்போது எஸ்.பி-யாக இருந்த மணிவண்ணனும் இதில் தீவிரம் காட்டினார். ஆனால், ஆளும்கட்சிக்காரர்கள் தலையிட்டு இருவரையும் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டனர்.

புதிய சார் ஆட்சியர் வந்ததும் மீண்டும் ஆளும்கட்சியினர் புதிய கல்குவாரிகள் அமைக்க விண்ணப்பித்துள்ளனர். எங்கள் பகுதியில் எத்தனை புதிய குவாரிகள் வருகிறது... யாரெல்லாம் அனுமதி கேட்டிருக்கிறார்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டேன். அதற்கும் உரிய பதில்வரவில்லை. அதிகாரிகளிடம் நேரில்போய் கேட்டும் பதில் இல்லை. இதிலிருந்தே கனிமவளத் துறையினர் ஆளும்கட்சியினருக்கு எந்த அளவுக்கு துணை போகிறார்கள் என புரிந்துகொள்ளலாம். அதிகாரிகள் உண்மையை மறைத்தாலும் எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியும் உள்ள குவாரிகள் அனைத்துமே திமுக எம்பி-யான ஞானதிரவியத்துக்குச் சொந்தமானது தான்” என்றார் சுந்தரலிங்கம்.

மோர்சா
மோர்சா

பரமேஸ்வரம் கிராமத்தில் கம்பீரமாக கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது மோர்சா என்ற அமைப்பு. இருக்கன்துறை, கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் கூம்பு போல் உயர்ந்து நினைவுச்சின்னம் போல் நிற்கிறது மோர்சா. தொல்லியல் துறை இதை பராமரிப்பதாக அங்கிருக்கும் ஒரு கல்லில் மட்டும் குறிப்பு உள்ளது. ராணுவத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை ராணுவ வீரர்கள் இங்கு வந்து செல்வதாகச் சொல்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ராமதாஸ்.

42 அடி உயரம், 157 அடி சுற்றளவும் கொண்டதாக இருக்கிறது மோர்சா. மேப்பின் வழிகாட்டலில் தான் ராணுவத்தினர் இங்கு வருவதாகச் சொல்லும் மக்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிகிறதே தவிர அதன் வரலாறு தெரியவில்லை. இத்தனைக்கும் மேலாக பரமேஸ்வரபுரம் ஊராட்சியின் சின்னமாகவே இந்த மோர்சா தான் உள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மோர்சாவுக்கும் கல் குவாரிகள் வேட்டு வைப்பதாக இந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

ராதாபுரம் தொகுதியில் இன்னும் கூடுதலாக கல் குவாரிகள் முளைக்கக் காத்திருக்கின்றன. சபாநாயகர் அப்பாவுவின் தொகுதி இது. அவரிடம் இதுகுறித்து முறையிடச் சென்றால் அவரை சந்திக்கவே முடிவதில்லை என புலம்புகின்றனர் தொகுதிவாசிகள். திருநெல்வேலி எம்பி-யான ஞானதிரவியத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திமுக பெரும்புள்ளிகளுக்கு இங்கே குவாரிகள் இருப்பதால் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டாலும் அதிகாரிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறார்கள் உள்ளூர் மக்கள்!

மோர்சா அருகில் இருக்கும் கல்லில் தொல்லியல் துறை குறியீடு
மோர்சா அருகில் இருக்கும் கல்லில் தொல்லியல் துறை குறியீடு

இது குறித்து நம்மிடம் பேசிய திமுகவினரோ, “கல் குவாரி விஷயத்தில் ஆளும்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் என்பதெல்லாம் மிகையான பேச்சு. ஒரு குவாரி அமையும்போது பலர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். அங்கே சின்னச் சின்ன விதிமீறல்கள் இருக்கலாம். மற்றபடி, சட்டவரம்புக்குட்பட்ட பகுதிகளிலேயே குவாரிகள் அமைக்கப்படுகிறது” என்கிறார்கள்.

சட்டவரம்புக்குட்பட்ட பகுதிகளாக இருந்தாலுமே விவசாயத்துக்கு ஆபத்து விளைவிக்கும் குவாரிகளுக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது என்பதே ஏரியா மக்களின் குரலாக இருக்கிறது. விபத்து நடந்து 4 உயிர்கள் பலியாகி விவாதத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலாவது இவர்களின் அவலக்குரல் அரசின் காதில் கேட்கிறதா என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in