ஸ்மார்ட் சிட்டி ஊழலில் திமுகவுக்கும் பங்கிருக்கிறது!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

புதிய தமிழகம் கட்சி 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடுவதுடன், கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதற்காகவும் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்படியொரு மண்டல மாநாட்டுக்காக மதுரை வந்திருந்தவரை 'காமதேனு' நேர்காணலுக்காகச் சந்தித்தோம். இனி பேட்டி...

புதிய தமிழகம் கட்சி இதுவரையில் சாதித்தது என்ன, அடுத்த இலக்கு என்ன?

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, கண்டதேவியில் ஆதிக்கசாதி வெறிக்கு எதிராக அனைத்து சாதியினரும் வடம்பிடித்து தேர் இழுக்கும் உரிமைபெற்றது, வீரன் சுந்தரலிங்கத்துக்கு அரசு விழா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும், அரசு கல்லூரிகளிலும் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வைத்தது என்று நிறையச் சொல்லலாம்.

தென்மாவட்டங்களில் வன்முறைக்குத் தாக்குபிடிக்க முடியாமல் மீனாட்சிபுரத்தில் மக்கள் மதம் மாறினார்கள். பிற ஊர்களில் மதமாற்றத்துக்குத் தலைப்பட்டார்கள். சாதிவெறியர்கள் தாக்கினால் திருப்பித் தாக்குவோம் என்ற எங்கள் உத்தியால், மக்கள் தன்னம்பிக்கை பெற்றதுடன், மதமாற்ற முழக்கங்களும் மறைந்துபோயின. கட்சியை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்வு, தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நிதி நிலையை உயர்த்துவது போன்றவையே கட்சியின் உடனடி செயல்திட்டங்கள். அதற்காக டிசம்பர் 15-ம் தேதி தென்காசி மாவட்ட மாநாடு, ஜனவரி 6-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட மாநாடு தொடர்ந்து அனைத்து மாவட்ட மாநாடுகளையும் நடத்தவிருக்கிறோம்.

திடீரென ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறீர்களே, என்ன காரணம்?

இன்றைய நவீன காலத்துக்கேற்ப நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், இணையம் உள்ளிட்ட நவீன வசதிகளையும் மேம்படுத்துவதற்காகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்து பல்லாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நிதியை தமிழகத்தில் முறையாகப் பயன்படுத்தாமல் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தியதன் விளைவாகவே, நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுத்தளங்களைவிட 2 அடி உயரம் கூடுதலாக கழிவுநீர் வாய்க்கால் கட்டியது தொடங்கி பள்ளமான இடத்தில் 20, 30 அடி ஆழத்திற்குள் வணிக வளாகம் கட்டுவது என்று எத்தனையோ சொதப்பல்கள். சும்மா சொல்லவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் நானே நேரடியாக ஆய்வுசெய்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

நகரங்களை நரகமாக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். முன்பு எப்படி கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறினார்களோ, அதேபோல இப்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு இடம்பெயர்கிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தத் திட்டங்களை இப்போதே நிறுத்தாவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

கோவையை மையமாகக்கொண்டு அரசியல் செய்யும் நீங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கியபோதே தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கலாம் அல்லவா? 90 சதவீத பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பதால் என்ன பயன்?

நான் கோவையை மையமாக வைத்தல்ல, தமிழ்நாட்டை மையப்படுத்தித்தான் அரசியல் செய்கிறேன். அடுத்து நான் எல்லாம் முடிந்த பிறகுதான் இந்தப் பிரச்சினையைக் கிளப்புகிறேன் என்பதும் தவறு. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடித் திட்டமான ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டக் காலத்தில் இருந்தே இதில் நடக்கிற ஊழல்களைச் சுட்டிக்காட்டி வருகிறேன். அப்போது வெளிவந்த எங்கள் கட்சியின் வாரப்பத்திரிகையான புதிய தமிழகத்தில்கூட, இதுபற்றி பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

இப்போதும்கூட 2004-ம் ஆண்டு முதல் 2021 வரையில் இவ்விரு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செய்யப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், இதற்கென மத்திய அரசு தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும்தான் கோரிக்கை விடுத்திருக்கிறேன். 90 சதவீதம் பணி முடிந்துவிட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், தூத்துக்குடியில் பள்ளத்திற்குள் வணிக வளாகம் கட்டத் தீர்மானித்தது தான் அதிமுக அரசு, அந்தத் தவறைத் திருத்தாமல் அப்படியே செயல்படுத்துவது திமுக அரசுதான். எனவேதான், தவறான பணிகள் அனைத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்கிறேன்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இதே பிரச்சினை வந்தபோது, 'அது இடிக்கப்படுமா?' என்று கேட்டதற்கு 'மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. முடிந்தவரையில் சரிசெய்வோம்' என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறாரே?

தவறுகளைச் சரி செய்ய வேண்டுமே தவிர, தொடரக்கூடாது. அதுதான் மாநகர வெள்ளத்துக்குக் காரணம். சீனா போன்ற நாடுகளில் எல்லாம் 100 மாடி கட்டிடமே கட்டப்பட்டாலும்கூட தவறு என்று தெரிந்தால், அடுத்த கணமே இடித்துத் தரைமட்டமாக்கிவிடுகிறார்கள். இந்தத் தவறுகள் அதிமுக ஆட்சியில் நடந்தாலும், திமுகவினரும் பலன்பெற்றிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் உண்மையிருக்கும் என்றே தோன்றுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

உங்கள் கோரிக்கையில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதே?

அரசியலாக இல்லாமல், முழுமையான சமூக மாற்றத்துக்காகவே அந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அது நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்திருக்கும். ஆனால், ஒன்றைச் செய்து இன்னொன்றை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினையை முன்னெடுத்ததால், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது. மற்ற சமூக மக்களின் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் வாக்குகளையும் புற்றீசல்போல் புறப்பட்ட அமைப்புகள் சிதறடித்துவிட்டன. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக செயல்பட்டு, பிறகு பொள்ளாச்சியில் திமுக வேட்பாளராகவே களமிறங்கியவர் நீங்கள். இப்போது எல்லாப் பிரச்சினைகளிலும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கிறீர்களே, ஏன்?

நான் எந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினேன் என்று சொல்றீங்க?

உங்களது முதல் மாவட்ட மாநாட்டுக்குக்கூட இந்து ஒற்றுமை மாநாடு என்று பெயர் வைத்திருக்கிறீர்களே?

இந்து என்று சொன்னால், அது பாஜகவுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுமா? உங்கள் பார்வையே தவறு. இந்து ஒற்றுமை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் இருக்கிறது. இந்துக்களுக்கு ஒரு வீழ்ச்சி என்றால், அது வெளியில் இருந்து வந்த தாக்குதல்களால் வந்தது கிடையாது. உள்ளுக்குள் இருக்கிற பிரச்சினைகளால்தான் பலவீனம் வந்தது என்பது என்னுடைய கருத்து. இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றால், அது இந்தியாவுக்கே பிளவினை ஏற்படுத்தும். வ.உ.சி., பாரதியார், கட்டபொம்மன், காந்தி எல்லோரும் தேசபக்தி இந்துக்கள் ஒற்றுமை பற்றிப் பேசினார்கள். அவர்கள் எல்லாம் பாஜகவா?

திரிபுரா கலவரத்தை கண்டித்து விசிக தொடங்கி கம்யூனிஸ்ட்கள் வரையில் போராடுகிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சினையின் தொடக்கமான பங்களாதேஷ் கலவரத்தைக் கண்டித்து நீங்கள் பேசுகிறீர்களே?

அண்டை நாடான பங்களாதேஷில் துர்கா பூஜை சமயத்தில் குரானை கொண்டுபோய் செயற்கையாக வைத்து, வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி அங்கே 22 மாவட்டங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்கள் நிர்கதியாக நிற்கிறார்கள். அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எந்த இயக்கமும் குரல்கொடுக்கவில்லை என்பதற்காக நானும் அமைதியாக இருக்க வேண்டுமா? பங்களாதேஷ் என்றில்லை, இலங்கையில் போரில் கணவனை இழந்த 42 ஆயிரம் தமிழ்ப்பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் பிரச்சினையிலும் நான் பேசியிருக்கிறேன். அதேபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சர்வதேச அளவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் நான் இந்து ஒற்றுமை பற்றி பேசுகிறேன்.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் பாதிக்கப்படுகிற இந்துக்களுக்காகவும் குரல் கொடுக்கலாமே?

நான் பிரச்சினையின் அடிப்படையில்தான் அரசியல் செய்கிறேன். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடும். மத்திய அரசு தலா 5, 10 ரூபாயைக் குறைத்திருக்கிறது. அதேபோல மாநில அரசுகளும் குறைத்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் அப்படி குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

தமிழக அமைச்சரவையில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

ஆதிதிராவிடர் என்கிற அடையாளம் வேண்டாம் என்றுதான் அம்மக்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு அதே ஆதிதிராவிடர் நலத் துறையை வலிந்துகொண்டுபோய் திணிப்பது எந்த வகையில் நியாயம்? இந்தப் பிரதிநிதித்துவம் எப்படி அம்மக்களைத் திருப்திப்படுத்தும்?

ஓட்டப்பிடாரம் தொகுதியில் முதன்முறையாக நீங்கள் போட்டியிட்டபோது, ஜனதா கட்சி சின்னத்தில் நின்றீர்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள்?

இப்போது வெள்ளப் பாதிப்பு, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு என்று பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில்தான் என்னுடைய கவனம் இருக்கிறது. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்பமனுவும் பெறுகிறோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in