திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டுமென எடப்பாடியார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை இந்த விடியா திமுக அரசு போட்டிருக்கிறது.
மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களை யெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.
அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், விடியா திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!