ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு: பாஜக மீது போலீஸார் வழக்குப் பதிவு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த புகாரின் பேரில் மாநில போலீஸார் பாஜவின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக தங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்தது.

பஞ்சாபில் உள்ள ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடியை பாஜக வழங்க பேரம் பேசியதாக அக்கட்சி கூறியது. இதுபற்றி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" முன்பு டெல்லியில் தோல்வியடைந்தது. எனவே இப்போது பஞ்சாபில் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

ஆனால், மாநில பாஜக ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது மற்றும் பொய்களின் மூட்டை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய பாஜகவின் சுபாஷ் சர்மா, “மாநில அரசை கவிழ்ப்பதாக பாஜக மீது பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சீமா கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டு, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பெரிய பிளவுக்கு இட்டுச் செல்கிறது என்பதை இது காட்டுகிறது. கேஜ்ரிவாலின் தலையீட்டால் ஆம் ஆத்மி கட்சி பிளவுபடும் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் நடந்த ரெய்டினைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மத்திய அரசின் நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும், டெல்லி எம்எல்ஏக்கள் சிலருக்கு பாஜகவில் சேருவதற்கு தலா ரூ.20 கோடி பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபித்தார் கேஜ்ரிவால்.

முன்னதாக பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சீமா "பாஜக கட்சி மாறுவதற்கு ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.25 கோடி வழங்குகிறது. ஆபரேஷன் தாமரை கர்நாடகாவில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் டெல்லி எம்எல்ஏக்கள் உறுதியாக இருந்து பாஜகவின் நடவடிக்கையை தோற்கடித்தனர் " என்று தெரிவித்தது பரபரப்பை உருவாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in