ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி - பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி - பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா

பஞ்சாப் தோட்டக்கலைத்துறை அமைச்சர் பவுஜா சிங் சராரி, முதல்வர் பகவந்த் மானின் அமைச்சரவையில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். சில மாதங்களுக்கு முன்பு, சராரி "பணம் பறிப்பதற்கு ஒப்பந்தம் செய்ததாக" ஆடியோ கிளிப் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

பஞ்சாப் அமைச்சர் பவுஜா சிங் சராரி இன்று தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பகவந்த் மானுக்கு அனுப்பினார். அவர் அதை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ராஜினாமாவிற்கு தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டிய சராரி, தான் கட்சியின் விசுவாசமான சிப்பாய் என்றும், அப்படியே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் புதிய அமைச்சருக்கான பதவிப்பிரமாணம் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏ டாக்டர் பல்பீர் சிங் புதிய அமைச்சராக வர வாய்ப்புள்ளது.

அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் சில ஒப்பந்தக்காரர்களை மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் குறித்து, தனது நெருங்கிய உதவியாளருடன் சராரி பேசியதாகக் கூறப்படும் உரையாடலின் ஆடியோ கிளிப் சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், அந்த ஆடியோ தன்னை சிக்கவைக்க நடந்த சதி என்று சராரி கூறியிருந்தார்.

ஓய்வுபெற்ற காவலரான சராரி, பெரோஸ்பூரில் உள்ள குரு ஹர் சஹாய் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிரோன்மணி அகாலிதள வேட்பாளர் வர்தேவ் சிங்கை 10,574 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சராரியின் ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது, பகவந்த் மான் அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சரவையில் நான்கு இடம் காலியாக உள்ளது.

முன்னதாக, பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா கடந்த ஆண்டு மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான ஊழல் புகார்களை அடுத்து முதல்வர் பகவந்த் மான் அவரை பதவி நீக்கம் செய்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in