கர்நாடக சட்டசபை தேர்தல் அறிக்கையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பிஎப்ஐ-யை, பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டது தொடர்பான ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
பஜ்ரங் தள் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான ஹிதேஷ் பரத்வாஜ் அளித்த புகாரின் பேரில், சங்ரூர் மாவட்ட நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளத்தை "சிமி மற்றும் அல்-கொய்தா போன்ற தேச விரோத அமைப்புகளுடன்" ஒப்பிட்டுள்ளது என்று மனுதாரர் தனது புகாரில் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், "சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. சட்டம் மற்றும் அரசியலமைப்பு புனிதமானது. அதனை பஜ்ரங் தள், பிஎஃப்ஐ போன்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் மீற முடியாது. எனவே பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகத்தினரிடையே பகை அல்லது வெறுப்புணர்வை ஊக்குவிப்பவர்கள் மீது தடை விதிப்பது உட்பட சட்டத்தின்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.