பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை டும் டும் டும்: 2-வது திருமணம் செய்கிறார்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டாக்டர் குர்பிரீத் கவுரை நாளை திருமணம் செய்து கொள்கிறார், அது அவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும்.

பகவந்த் மானின் திருமணத்திற்காக சண்டிகரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இது ஒரு தனிப்பட்ட விழாவாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

பகவந்த் மான் இதற்கு முன்பு இந்தர்ப்ரீத் கவுர் என்பவரை மணந்தார், அவரிடம் இருந்து 2015-ல் விவாகரத்து பெற்றார். பகவந்த் மானுக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தர்ப்ரீத் கவுர் தனது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த இரண்டு குழந்தைகளும் பகவந்த் மானின் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

டாக்டர் குர்ப்ரீத் கவுரை தனது மருமகளாக பகவந்த் மானின் தாயார் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பகவந்த் மானின் சகோதரி மற்றும் தாய் ஆகிய இருவரும் அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என தீவிரமாக பெண் தேடி வந்தனர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க 48 வயதான பகவந்த் மான் நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பகவந்த் மான் 2014 இல் முதன்முறையாக சங்ரூரில் இருந்து எம்.பி.யானார். இந்த ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன், ஆம் ஆத்மி கட்சி பகவந்த் மானை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் களமிறங்கியது. அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in