
பஞ்சாபின் பதிண்டா ஊரகத் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்பட்டா லஞ்ச வழக்கில் விஜிலென்ஸ் பீரோவால் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபின் பதிண்டா ஊரகத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்பட்டா புதன்கிழமை மாலை ராஜ்புராவில் கைது செய்யப்பட்டார் என்று விஜிலென்ஸ் பீரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே வழக்கில் கோட்பட்டாவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க், பஞ்சாப் விஜிலென்ஸ் பீரோவால் சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
25 லட்சத்தை அரசு மானியமாக வழங்குவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக, பதிண்டாவில் உள்ள குடா கிராமத் தலைவரின் கணவர் அளித்த புகாரைத் தொடர்ந்து ரஷிம் கார்க் பிப்ரவரி 16 அன்று கைது செய்யப்பட்டார். 4 லட்சம் ரொக்கத்துடன் கார்க் விஜிலென்ஸ் பீரோ குழுவினரிடம் பிடிபட்டார்.
ஆனால், கார்க் உடன் எந்த தொடர்பும் இல்லை என்று கோட்பட்டா முன்பு மறுத்தார். பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.