``கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு காவல்துறை ஏன் இதுவரை கைது செய்யவில்லை'' என ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிமுக - ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இரண்டு மூன்று தினங்களாக காமெடியாக, கைத்தட்டல், விசில் என போகின்றது. சிங்கக் கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள். கூட்டணி முடிந்துவிட்டது என்றும் சொன்னார்கள். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூட்டணி முறிந்து விட்டது என சொல்லிவிட்டார்.
ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிக்காரர்களை அமைதியாக இருக்க எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஒளிந்தார் என பேசுகின்றார் அண்ணாமலை. இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார். ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள கூடாது. எடப்பாடி பழனிசாமி இப்போது எல்லாரையும் வாயை மூட சொல்லிட்டார் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அமைதியாக இருக்கச் சொல்லி எந்த அறிக்கையும் வரவில்லையே என்று கேட்டதற்கு, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் போனது என்று பதில் அளித்தார். மேலும் கூறுகையில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்த வேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார். அப்படி உறுதிப்படுத்தினால் எடப்பாடி சிறைக்கு போவார்.
கோடநாடு கொலை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிசாமி மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. எஸ்.பி.வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர். எடப்பாடி பழனிசாமியை விட வேலுமணி புத்திசாலி. எடப்பாடி பழனிசாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கிறது. ஆனால் அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகழேந்தி தெரிவித்தார்.