ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்குகிறது புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்குகிறது புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்  மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. 

புதுச்சேரி மாநில  சட்டப்பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த பிப்.3-ம் தேதியன்று ஒருநாள் மட்டும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துறைகளுக்கான கூடுதல் நிதி கோரிய தீா்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. சுமாா் 30 நிமிடங்கள் மட்டுமே அன்றைய கூட்டம் நடைபெற்று  ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மாா்ச் மாதம் மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் அதில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மார்ச் 9-ம் தேதி புதுவை சட்டப்பேரவை கூடுவதற்கான அனுமதியை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார். இதையடுத்து சட்டப்பேரவைச் செயலா் ஜெ.தயாளன் பேரவைக் கூட்டம் குறித்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்கள், மத்திய, மாநில அரசுத் துறை செயலா்களுக்கு  தகவல் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என பேரவைத் தலைவா் தலைமையிலான குழுவால் முடிவெடுக்கப்படும். அறிவிக்கப்பட்டிருந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கையில் அந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா,  புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படுமா?  என புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்தக் கூட்டத் தொடரில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in