இந்தித் திணிப்புக்கு எதிராக ஜிப்மர் மருத்துவமனை முற்றுகை: திமுக எம்எல்ஏக்கள் கைது

ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மருத்துவமனை முன்பாக புதுச்சேரி மாநில திமுக சார்பில் இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அலுவலக மொழி 1976-ம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற குழு அளித்துள்ள பரிந்துரையின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல கட்சிகளின் சார்பிலும் ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திமுக சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

அத்துடன் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்படாமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் அனைத்து பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற ஆர். சிவா, அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in