இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து, குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை: பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அசத்தல்

நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி
நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் முதல்வர் ரங்கசாமி

கடந்தாண்டு புதிதாக பொறுப்பேற்ற நிலையில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்திருந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய பாஜக அரசின் சம்மதத்தோடு இந்த ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வரும் ரங்கசாமி
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வரும் ரங்கசாமி

தமிழக சட்டப்பேரவையோடு தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் புதுச்சேரியில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததே காரணம். இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில் ஒரு வழியாக மாநில அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதனைடுத்து இன்று சட்டப்பேரவை கூடியதும் 10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. இதில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்கள் மேலும் அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எங்க அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு, இளைஞர் நலன்துறை ஆகியவற்றை பிரித்து தனித்துறை தொடங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியியல் மையம் அமைக்கப்படும், மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும். 12.5 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும். மரச்செக்கு எண்ணெய் தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மாற்றப்படும். இலவச பாட புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மாணவர்களுக்கான திட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுவதும் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். அதற்காக லாஸ்பேட்டை, தவளகுப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காரைக்கால் பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பாரதியார் பல்கலைக்கழக கூடத்தில் 16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும். வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று பல்வேறு திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இவை தவிர மேலும் இரண்டு அசத்தல் அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும் என ரங்கசாமி அறிவித்துள்ளதற்கு புதுச்சேரி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் அது இன்னமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசு உதவியும் பெறாத 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் அறிவித்து புதுச்சேரி மகளிரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்

படங்கள் : எம்.சாம்ராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in