பொதுத்துறை நிறுவனங்களை நரேந்திர மோடி தலைமையிலான அரசு அழித்து வருகிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதானிக்கு விற்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு வந்தது. அங்குள்ள ஷாஹீத் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, "ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு, சட்டமன்றத்தில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது. இதற்காக கூட்டணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் சதியை முறியடித்து, ஏழைகளின் அரசை காப்பாற்றிய ஹேமந்த் சோரனுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
நரேந்திர மோடி அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அழித்து வருகிறது. நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்இசி (HEC) நிறுவனத்தை மத்திய அரசு முடக்கி வருகிறது. வரும் நாட்களில் இந்நிறுவனம், அதானிக்கு விற்கப்படும். ஆமாம், ஹெச்இசி நிறுவனத்தை மத்திய அரசு தனியார் மயமாக்கப் பார்க்கிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களைக் காக்க குரல் கொடுங்கள் என பதாகைகளை ஏந்தியவாறு நிற்கிறார்கள். BHEL, HAL, HEC என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதானிக்கு விற்கப்பட்டு வருகிறது" என குற்றம் சாட்டினார்.
முன்னதாக, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி, அவரது மனைவி கல்பனாவைச் சந்தித்தார். இது குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பு செயலாளர் ஜெயராம் ரமேஷ், "ஷாஹீத் மைதானத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்துக்கு முன்னதாகவும், சட்டப்பேரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசின் வெற்றியை அடுத்தும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவைச் சந்தித்தார்" என குறிப்பிட்டிருந்தார்.