திமுக அரசை மீண்டும் மிரட்டும் மின் ‘கண்டம்’!

திமுக அரசை மீண்டும் மிரட்டும் மின் ‘கண்டம்’!

ஆட்சிக்கு எதிராக வேகமாகப் பரவும் அதிருப்தி அலை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருக்கிறது என கூப்பாடு போட்ட திமுகவின் அரசு, இப்போது தன் பங்குக்கு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் சுமைகளை இறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, மின் கட்டண உயர்வு ஆட்சிக்கு எதிரான அதிர்வலைகளை மக்கள் மத்தியில் வேகமாகப் பரப்பி வருகிறது.

கரோனா நெருக்கடியால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொழில்கள் அனைத்தும் துவண்டு போய்க் கிடக்கிறது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பையும் சந்தித்துள்ளனர். நிறுவனங்களின் வருமானத்தையும், ஊழியர்களின் வருமானத்தையும் கரோனா வைரஸ் சரிபாதியாக தின்று ஏப்பம் விட்டுவிட்டது. இருக்கும் வருமானத்தை வைத்தாவது காலத்தை கடத்தலாம் என்றால், பிப்ரவரியில் வெடித்த ரஷ்யா - உக்ரைன் போரால் மீண்டும் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாமல் உயர்ந்துவிட்ட நிலையில், சாமானியர்களுக்கும் அத்தியாவசியமான மின்சாரத்தின் கட்டணத்தையும் உயர்த்தி மக்களுக்கு கூடுதல் ஷாக் கொடுத்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசு தான் கட்டணத்தை உயர்த்தச் சொன்னது எனச் சொன்னாலும் பழி என்னவோ திமுக அரசைத்தான் சுற்ற ஆரம்பித்திருக்கிறது.

மின்சார வாரியத்தின் கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக அரசு, கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரைகளையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் இது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வந்தது முதலே பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் என பலதரப்பும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தினார்கள். இதையெல்லம் சட்டைசெய்யாத தமிழக அரசு, ஒரே முடிவாக கடந்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது போதாதென்று இனி ஆண்டுதோறும் ஜுலை 1-ம் தேதி மின் கட்டணத்தை 6 சதவீதம் அளவுக்கு உயர்த்திக் கொள்ளவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என நீண்ட விளக்கம் கொடுத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், “ பிற மாநிலங்களை விட இப்போது உயர்த்தப்பட்ட நிலையிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால் தமிழக மின் வாரியம் கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளது. மத்திய அரசின் ஆர்இசி/பிஎஃப்சி நிறுவனங்கள் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மின் கட்டணத்தை திருத்தினால்தான் கடனை அனுமதிப்போம் என நிபந்தனை விதித்துள்ளது. மின் கட்டண திருத்தம் செய்யாததால் மீதமுள்ள ரூ.3,435 கோடி கடன்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் மின்கட்டணத்தைத் திருத்தம் செய்யாவிட்டல் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கான மானியங்கள் கிடைக்காது; அந்தத் திட்டங்கள் எதையும் தொடங்க முடியாத நிலையும் ஏற்படும்.

உள்ளபடியான வழங்கல் விலைக்கான மின்கட்டணம் இல்லாததால் தரவரிசையில் பின் தங்கியுள்ள தமிழக மின் உற்பத்தி பகிர்மான கழகத்துக்கு கடன் வழங்க வங்கிகள் எதுவும் முன்வரவில்லை. இதன் காரணமாக, பல மின் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

புள்ளி விவரங்கள் எத்தனை விளக்கங்களை சொன்னாலும்கூட ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நோந்துபோயிருக்கும் மக்களால், இன்னொரு பெருஞ்சுமையை தாங்கமுடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.

எவ்வளவு மின் கட்டணம் உயர்கிறது?

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய மின் கட்டண விகிதப்படியும் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் இல்லை. அதனையடுத்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டண விகிதம், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மற்றொரு கட்டண விகிதம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டுக்கு உட்பட்ட விகிதத்தில் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.25-ம், 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50-ம் வசூலிக்கப்படும். 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ம் மின்கட்டணமாக வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50-ம் 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ம் வசூலிக்கப்படும். 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.50-ம் வசூலிக்கப்படும் 801 யூனிட்டுக்கு மேல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாயும், 1001 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 11 ரூபாயும் மின்கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதற்கு முன்பு, 200 யூனிட் பயன்படுத்தியவர்கள் 170 ரூபாய் கட்டணம் செலுத்தியிருப்பார்கள் இப்போது ரூ.55 கூடுதலாக 225 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு 300 யூனிட்டுக்கு ரூ.530 செலுத்தியவர்கள் தற்போது ரூ.145 கூடுதலாக ரூ.675 செலுத்த வேண்டும். முன்பு 400 யூனிட்டுக்கு ரூ.830 செலுத்தியவர்கள் தற்போது ரூ.295 கூடுதலாக ரூ.1125 செலுத்த வேண்டும்.

முன்பு 500 யூனிட்டுக்கு ரூ.1130 செலுத்தியவர்கள் தற்போது ரூ.595 கூடுதலாக ரூ.1725 செலுத்த வேண்டும். முன்பு 600 யூனிட்டுக்கு ரூ.2446 செலுத்தியவர்கள் தற்போது ரூ.310 கூடுதலாக ரூ.2756 செலுத்த வேண்டும். முன்பு 700 யூனிட்டுக்கு ரூ.3110 செலுத்தியவர்கள், தற்போது ரூ.550 கூடுதலாக ரூ.3660 செலுத்த வேண்டும். முன்பு 800 யூனிட்டுக்கு ரூ.3760 செலுத்தியவர்கள், தற்போது ரூ.790 கூடுதலாக ரூ.4550 செலுத்த வேண்டும். முன்பு 900 யூனிட்டுக்கு ரூ.4420 செலுத்தியவர்கள், தற்போது ரூ.5550 செலுத்த வேண்டும்.

மின் கட்டண விவரம்
மின் கட்டண விவரம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி குடியிருப்புகளில் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலோ, அதற்கான ஒப்பந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களிடம் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும். அதேபோல, ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால், அவர்கள் தங்களது தனித்தனி குடும்ப அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது வீட்டு மின் இணைப்புக்கும் பொதுப் பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து நிலைக் கட்டணம் சிறிது குறைக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கு 500 யூனிட் வரை 4 ரூபாயாக இருந்த மின் கட்டணம் இப்போது ரூ.4.50-ஆக உயர்ந்துள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் ரூ.4.60 - ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.6.50 - ஆக அதிகரித்துள்ளது. வணிக நிறுவனங்களுக்கு 100 யூனிட் வரை 5 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 6 ரூபாயாகவும், 100 யூனிட்டுக்கு மேல் ரூ.8.05-ஆக இருந்த கட்டணம் இப்போது ரூ.9.50 -ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், உயர் அழுத்தப்பிரிவு, தாழ்வழுத்தப் பிரிவு என தொழில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் நிலைக்கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் கவலையில் உள்ளனர்.

இந்த புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இதன் மூலம் 2023-24ல் மின் வாரியத்துக்கான இழப்பு ரூ.748 கோடியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் இரும்பு உருக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ள பன்னீர் செல்வராஜ் மின்கட்டண உயர்வு குறித்து பேசும்போது, “ தமிழகத்தில் உற்பத்தி தொழில்கள்தான் அதிகளவில் இயங்குகின்றன. அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, இங்கே மின் கட்டணம் குறைவு என்பதுதான். ஏற்கெனவே நாம் வெளி மாநிலங்களிலிருந்து மூலப்பொருட்களை வாங்கித்தான் இங்கு இரும்பு பொருட்கள், பம்ப், மோட்டார் உதிரிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறோம். அதனால் மற்ற மாநில உற்பத்தியாளர்களுக்கு சவாலாக குறைவான விலையில்தான் நம் தயாரிப்புகளை கொடுத்து வந்தோம். தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் எங்களால் வெளி மாநிலங்களுடன் போட்டி போடுவது சிரமம். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா என தொடர்ச்சியாக நலிந்துவரும் தமிழக தொழில்துறைக்கு இந்த மின்கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது” என்றார்.

இது தொடர்பாக நுகர்வோர் தரப்பிலிருந்து பேசிய இன்னும் சிலர், “கடந்த இரண்டு ஆண்டுகளில், இன்னும் சொல்லப்போனால் கடந்த சில மாதங்களில் மளிகைப்பொருட்கள் விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது. 90 ரூபாய் விற்ற துவரம் பருப்பு இப்போது 130 ரூபாய். 120 ரூபாய் விற்ற எண்ணெய் இப்போது 170 ரூபாய். 75 ரூபாய் விற்ற பெட்ரோல் இப்போது 103 ரூபாய். 800 ரூபாய் விற்ற சிலிண்டர் இப்போது 1100 ரூபாய். இப்படி எல்லா விலைவாசியும் மக்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசும் மின் கட்டணத்தை உயர்த்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில், மாதா மாதம் மின் அளவீடு செய்வோம் என அறிவித்தார்கள். அதனை நடைமுறை படுத்துவார்கள் என பார்த்தால், இவர்கள் கட்டணத்தை உயர்த்தி ஷாக் கொடுக்கிறார்கள். சொல்லாதையும் செய்வோம் என்பது இதுதான் போலிருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு என இரண்டுமே பாரபட்சமில்லாமல் மக்களைப் படுத்தி எடுக்கிறார்கள்” என்றார்கள்

ஏற்கெனவே ‘மின்வெட்டு’ கண்டத்தால் தான் ஆட்சியைத் தொலைத்தது திமுக. மக்களவைத் தேர்தலுக்குள் மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற தெம்பில் இப்போது மின் கட்டணத்தை துணிச்சலாக உயர்த்தி இருக்கும் திமுக அரசு, மக்கள் பழைய வரலாறை படிப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்ளட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in