பெரியார் படத்துடன் தீபாவளி வாழ்த்து: தமிழக அமைச்சரின் ட்விட்டரால் திமுகவில் சலசலப்பு

பெரியார் படத்துடன் தீபாவளி வாழ்த்து: தமிழக அமைச்சரின் ட்விட்டரால் திமுகவில் சலசலப்பு

பெரியார் மற்றும் திமுக தலைவர்களின் படங்களோடு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தது தற்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாக பார்ப்பது மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போலத் தீபாவளிக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இல்லங்களில் மகிழ்ச்சி ஒளிரட்டும். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே அரசியல் விவகாரங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை முதல்வர் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்ததாகவும் செய்திகள் பரவியுள்ளன. இந்நிலையில் முதல்வரே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்க்கும் போது, பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவர்களின் படங்களோடு சேர்த்து ஸ்டாலின் படத்தையும் போட்டு அமைச்சர் ஒருவர் வாழ்த்து சொல்லி இருப்பது திமுகவில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in