மோடி அருகில் அமர்ந்தவர் தான் தமிழகத்திற்கு தலைவர்; டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி

டெல்லியில் மோடி யாரை அமர வைத்திருந்தாரோ அவரே தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு தலைவர் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2019 ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் வலுவாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவானது எனவும் 2024 தேர்தலுக்காக தங்கள் கட்சிகளை தனித்தனியாக வலுப்படுத்தி கொண்டே கூட்டணியும் வலுப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலை தலைமையில் நடைபெறும் நடைபயணம் திமுகவின் லஞ்ச லாவண்யங்களுக்கும், கொலை, கொள்ளைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக 40 மக்களைவை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றது என கூறினார்.

கூட்டணிக்குள் இருக்கும் இரு நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடக்கின்றது என தெரிவித்த அவர் திமுக ஆட்சி அமைந்து 28 மாதத்தில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கனிமவளக் கொள்ளை நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார். சாலை பணிகளில் பெரிய அளவில் கொள்ளை நடைபெறுவதாகவும், டாஸ்மாக் மரணம் தினமும் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்

இந்த சூழலில் திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது எனக்கூறிய அவர் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு கவலையளிப்பதாகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். நதிமூலம், ரிஷி மூலம் பார்க்காமல் அனைத்தையும் மறத்து விட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும் எனவும் விரைவில் தமிழகத்தில் ஒருங்கணைப்பு கூட்டம் நடத்த பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பா.ஜ.க தலைவர் நட்டா அனைத்து கூட்டணி கட்சிகளையும் இணைத்து கூட்டம் நடத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக இரு தினங்களில் டெல்லி சென்று நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார்.

கடந்த கால விஷயங்களுக்குள் செல்ல விரும்பவில்லை எனவும் அதை பற்றி பேசுவதால் எந்த பலனும் இல்லை எனவும் கூறிய அவர் தே.ஜ.கூட்டணியில் உள்ள அனைவரும் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் எனவும் யாருக்கும் அறிவுரை கூறவில்லை, வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

வெளியே இருக்கின்ற எல்லா நண்பர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் மனக்கசப்பு அதிகரிப்பதற்கு முன்னதாகவே நட்டா தமிழகம் வர வேண்டும் எனக்கூறிய அவர் தே.ஜ.கூட்டணியை வெளியில் இருந்து உடைக்க முயற்சிப்பதாகவும் சின்ன, சின்ன விசயங்களை பெரிதாக்க கூடாது எனவும் கடந்த கால சம்பவங்களை பேசுவது எந்த காலத்திலும் உதவாது எனவும் தெரிவித்த அவர் வார்த்தை போர்களை விட்டு விட்டு திமுகவை தே.ஜ.கூட்டணி எதிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியின் தலைமை யார் என்ற கேள்விக்கு, டெல்லியில் மோடி, யாரை அருகில் அமர வைத்திருந்தாரோ அவரே தமிழகத்திற்கு தலைவர் என டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in