
மதுரையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரணநலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் இவ்வரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.