
மின்வாரியத்தில் முறையாக விண்ணப்பித்தும் தங்களுக்கு பணி வழங்கவில்லை என கூறி முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றால் கொளத்தூரில் பதற்றம் நிலவியது.
தமிழக மின்வாரியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அதில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து விண்ணப்பித்து வேலை கிடைக்காதவர்கள் கொளத்தூரில் உள்ள முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். ‘’தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த தகுதி என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும்’’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.