மக்களவை தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா... போட்டியிடப் போவது உ.பியா... ம.பியா?

பிரியங்கா காந்தி.
பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை, எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வைக்க  முடிவு செய்துள்ள, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, அவருக்கான தொகுதியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிராஸ் எம்.பி., ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகளுமான பிரியங்கா, அக்கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவராக உள்ளார். சோனியாவுக்கு பின், கட்சியில் அவரது குடும்பத்திலிருந்து ராகுல் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அவரால், வட மாநிலங்களில் ஓட்டுகளை வாங்கித் தர முடியவில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் சொந்த தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அவர் ஸ்மிருதி ராணியிடம் தோற்றுப் போனார். அதனால் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராகுலின் சகோதரியான பிரியங்காவை முன்னிறுத்த, காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்தது. அதையடுத்து அவருக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. 

பிரியங்கா
பிரியங்கா

மேலும், செயற்குழு போன்ற முக்கிய குழுக்களிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த உ.பி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், முதல் முறையாக களமிறக்கப்பட்ட பிரியங்கா,  அங்கு தீவிர பிரச்சாரம் செய்தும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. ஆனால்  அவர் பொறுப்பேற்று தீவிர பிரச்சாரம் செய்த இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதில் இருந்தே, அவருக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் மேலும் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில்  2024 நாடாளுமன்றத் தேர்தலில், அவரை களமிறக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரு குடும்பத்தினரின் ஆஸ்தான உ.பியிலிருந்தே, அவரை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு மூன்று முறை வென்ற பூல்பூர் தொகுதியில், அவரை  நிறுத்தலாமா என காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

1952, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக இந்த தொகுதியில்  நேரு வெற்றி பெற்றார்.  அமேதி, ரேபரேலி என நேரு குடும்பத்திற்கான, பாரம்பரியம் மிக்க தொகுதிகளில், மூன்றாவது தொகுதி பூல்பூர். இதனால், இங்கு பிரியங்காவை நிறுத்தலாம் என மேலிடத்திற்கு, அம்மாநில காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்துள்ளது. 

இருப்பினும், தற்போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்காக, அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், அங்குள்ள ஜபல்பூர் மக்களவை தொகுதியில் பிரியங்காவை நிறுத்தலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

இதற்கான முழுப்பொறுப்பை ஏற்பதாக கட்சியின் அம்மாநில தலைவர் கமல்நாத் வாக்குறுதி அளித்து, அதன்படியே பிரியங்காவை வெகுதீவிரமாக முன்னிறுத்தி, தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டும் வருகிறார்.

ஆக  உத்தரப்பிரதேசம் அல்லது மத்திய பிரதேசத்தில் பிரியங்கா காந்தி  போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in