‘கை’க்குக் கைகொடுக்காத பிரியங்கா பிரச்சாரம்!

‘கை’க்குக் கைகொடுக்காத பிரியங்கா பிரச்சாரம்!

“உத்தர பிரதேசத் தேர்தலில் பிரியங்கா காந்திதான் நட்சத்திரப் பிரச்சாரப் பேச்சாளர்” என்று காங்கிரஸ் கட்சி ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியது. அவர் சென்ற இடங்களில் நல்ல கூட்டமும் கூடியது. கடைசியில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்விதான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 403 தொகுதிகளிலும் தனித்து நின்று தோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் பொதுச் செயலாளராகவு, கட்சியின் உத்தர பிரதேசத் தேர்தல் பொறுப்பாளராகவும் பதவிவகிக்கும் பிரியங்கா காந்திக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைச் சரியாகவே உணர்ந்திருந்த அவர் உத்தர பிரதேசம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும், 40-க்கும் மேற்பட்ட பேரணிகளிலும் கலந்துகொண்டார். உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் என தேர்தல் நடந்த எல்லா மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்த பிரியங்கா, மொத்தமாக 340-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். பிரச்சாரம் செய்த பாஜக தொண்டர்களுக்கே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விநியோகித்து அசத்தினார். பிரச்சாரப் பயணத்தில் எதிர்ப்பட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி போன்றோருக்கும் வாழ்த்து சொன்னார்.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 சதவீதம் பெண்கள் என்பது சாத்தியமானது பிரியங்காவால்தான். அவருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரில் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். ‘லட்கி ஹூம் லட் சக்தி ஹூம்’ (பெண் நான்... என்னால் போராட முடியும்) எனும் முழக்கத்தை முன்வைத்து தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்தார். மழைக்கு நடுவிலும் தயங்காமல் பிரச்சாரம் செய்தார். வீடு வீடாகச் சென்றார். வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் தலைவர் என்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ரொம்பவே பிரயத்தனம் செய்தார்.

“ஐந்து வருடங்களில் எதையும் செய்யாமல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறார்கள்” என்று பாஜகவை வறுத்தெடுத்தார். ஆனால், இந்த முறையும் பாஜகவுக்கே பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் உத்தர பிரதேச மக்கள்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பிரியங்கா காந்தியின் செல்வாக்கு சரியும் எனும் ஊகங்கள் எழத் தொடங்கிவிட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in