
கர்நாடக முதல்வர் பதவிக்கான கோதாவில், மூன்றாம் நபராக இணைந்திருக்கிறார் மாநில அமைச்சரும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே.
”கட்சி மேலிடம் உத்தரவிட்டால் கர்நாடக முதல்வர் பொறுப்பை ஏற்பேன்” என்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பிரியங்க் கார்கே தெரிவித்திருப்பது அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் முதல்வராவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்க் கார்கே, "அதுகுறித்து கட்சி மேலிடம் சொல்லவேண்டும். அவர்கள் என்னை முதல்வராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டால், நான் அதனை மறுக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்த போதும், நிதர்சனத்தில் மாநில முதல்வருக்கான போட்டியில் மூன்றாவது நபராக அண்மையில் ஜூனியர் கார்கேவும் இணைந்திருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கே முதல்வர் நாற்காலிக்கான போட்டி தீவிரமானது. சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையிலான இந்த போட்டி, நீண்ட இழிபறிக்குப் பின்னரே முடிவுக்கு வந்தது. சித்தராமையா முதல்வரானார்; டி.கே.சிவகுமார் துணை முதல்வரானார். திரைமறைவு ஒப்பந்தத்தின்படி, இரண்டரை ஆண்டுகள் கழித்து முதல்வர் நாற்காலியில் டி.கே.சிவகுமார் அமர்வார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.
அதற்கான சாத்தியங்கள் வெளிப்படையாக தெரியாதபோதும், கர்நாடகத்தில் ஆட்சியை அமைக்கும் கூட்டணிக்கட்சிகள் முதல் தனிப்பெரும்பான்மை கட்சி வரை, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முதல்வர் என்ற ஏற்பாடு பிரபலமானது. இதன் அடிப்படையில் டி.கே.எஸ் ஆதரவாளர்கள் காத்திருக்க, அவர்களின் நம்பிக்கையை அண்மையில் முதல்வர் சித்தராமையா தகர்த்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவால், மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து வருமா என்ற கேள்விக்கு முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கையில், "எங்களுடைய அரசு நிச்சயம் 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார். கொசுறாக, “அந்த 5 ஆண்டுகளும் நானே முதல்வர் பதவியில் தொடருவேன்" என்றார். சித்தராமையாவின் இந்த பதில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முதல்வர் என்ற விவாதம் கர்நாடக காங்கிரஸில் இன்னும் உயிரோடு இருப்பதை காட்டியிருக்கிறது.
இந்த சூழலில் முதல்வர் பதவிக்கான கோதாவில் மூன்றாம் நபராக பிரியங்க் கார்கேவும் இணைந்திருக்கிறார். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையிலான மோதல் முற்றினால், ஜூனியர் கார்கேவின் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
அந்தளவுக்கு சித்தராமையா, சிவகுமாருக்கு இணையாக கோஷ்டிகளை சேர்த்துக்கொண்டு தனி அரசியல் நடத்தி வருகிறார் பிரியங்க் கார்கே. டெல்லியின் செல்வாக்கும் ஜூனியர் கார்கேக்கு அதிகம் இருப்பதால், இரண்டரை ஆண்டு முடிவில் முதல்வர் பதவிக்கான போட்டி மும்முனையாக மாறவிருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!