'கள ஆய்வில் முதல்வர் திட்டம்': தொடங்கி வைக்க ரயிலில் புறப்பட்டார் ஸ்டாலின்

வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம்.
வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம்.சென்னை ரயில் நிலையம்

'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயிலில் இன்று வேலூருக்குப் புறப்பட்டார்.

தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று முதல் இரண்டு நாட்கள் அவர் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து ரயிலில் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் 12.10 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 196 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 5 ஆயிரத்து 351 புதிய வகுப்பறைகள் ரூ.784 கோடி மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ரூ.15 கோடியே 96 லட்சத்தில் புதிய கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். அப்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேசுகிறார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மாலை 5 மணி அளவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, விஐடி வேந்தர் விசுவநாதன் கலந்து கொள்கின்றனர். விழா முடிந்ததும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.2) காலை 9.30 மணிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் மற்றும் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in