'பிரதமர் மோடி இதனைச் செய்யவேண்டும்...’: வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை

'பிரதமர் மோடி இதனைச் செய்யவேண்டும்...’: வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சிகளின் அரசியல் தலைமைகளை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமரின் உரைகள் அடங்கிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, “ இந்தியா சுகாதாரம், வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்ததற்கு பிரதமர்தான் காரணம். இந்தியாவின் எழுச்சியை உலகம் இப்போது அங்கீகரிக்கிறது. இந்தியா இப்போது உலகின் முக்கிய சக்தியாக உள்ளது, அதன் குரல் இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது பிரதமரின் செயல்களால், மக்களுக்கு அவர் அளித்து வரும் வழிகாட்டுதலால் சாத்தியமானது” என்று கூறினார்

மேலும், “பிரதமரின் சாதனைகள் இருந்தபோதிலும், சில தவறான புரிதல்கள், அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக சில பிரிவினர் அவரை விமர்சிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இந்த தவறான புரிதல்களும் களையப்படும். பிரதமர் இந்த பக்கமும் அந்த பக்கமும் அரசியல் தலைமைகளை அடிக்கடி சந்திக்க வேண்டும்.

அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். நீங்கள் எதிரிகள் அல்ல போட்டியாளர்கள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், பிரதமரின் அமைப்பு, ஜனாதிபதியின் அமைப்பு, முதலமைச்சரின் அமைப்பு என அனைத்து நிறுவனங்களும் மதிக்கப்பட வேண்டும், அதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

முஸ்லீம்களிடையே முத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றியதற்காக பிரதமரை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பாராட்டினார். "முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்குவதற்கு நேருவால்கூட துணிச்சலான முடிவை எடுக்க முடியவில்லை. மோடி அதைச் செய்யத் துணிந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த முடிவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வோம்" என்று கூறினார்.

இந்த விழாவில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஐ&பி செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in