இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு தீ வைப்பு: போராட்டக்காரர்கள் ஆவேசம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு தீ வைப்பு: போராட்டக்காரர்கள் ஆவேசம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் திண்டாடி வரும் நிலையில், விலைவாசி விண்ணை தொட்டுவிட்டது. ஒரு கிலோ அரிசி 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் போராட்டத்தால் இலங்கை ஸ்தம்பித்தது. அப்போது நடந்த வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. எம்பி ஒருவர் கொல்லப்பட்டார். பொதுமக்களில் பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததோடு, நாட்டை விட்டு வெளியேறினார். நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறினார். இதையடுத்து, இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் மக்களின் போராட்டம் சற்று தணிந்தது. இந்தியா உள்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வந்தாலும் அந்த நாடு பொருளாதார சரிவில் இருந்து மீளமுடியாத நிலைக்கு சென்றுவிட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், அமைதியாக இருந்த பொதுமக்கள் இன்று கொதித்தெழுந்து விட்டனர். மக்களின் போராட்டத்தால் நேற்று இரவே அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோடிவிட்டார். அவர் அமீரக நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொந்தளித்த பொதுமக்கள் அதிபர் மாளிகையில் புகுந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனிடையே, அனைத்துக்கட்சி கூட்டத்தை அவசரமாக கூட்டினார் பிரதமர் ரணில். அப்போது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்துக்கட்சி தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். ரணில் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in