சிலிண்டர் மீது பிரதமரின் புகைப்படம்: நிர்மலா சீதாராமனை திகைக்க வைத்த தெலங்கானா!

சிலிண்டர் மீது பிரதமரின் புகைப்படம்: நிர்மலா சீதாராமனை திகைக்க வைத்த தெலங்கானா!

ரேஷன் கடைகளில் ஏன் பிரதமரின் படத்தை வைப்பதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானாவில் காமாரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கேள்வி எழுப்பினார். இந்த செயலுக்காக தெலங்கானாவில் விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி டிஆர்எஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜகீராபாத் மக்களவை தொகுதியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது காமாரெட்டி மாவட்டம் பிர்குர் எனும் இடத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற அவர், ரேஷன் அரிசியில் பெரும்பகுதி நிதி பங்களிப்பை மத்திய அரசு வழங்குகிறது. அப்படி இருக்கையில் ஏன் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.

நிர்மலா சீதாராமனின் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தெலங்கானா அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ காமரெட்டி மாவட்ட கலெக்டருடன் மத்திய நிதியமைச்சர் நடந்துகொண்ட கட்டுக்கடங்காத நடத்தையைக் கண்டு நான் திகைக்கிறேன். இவர்கள் கடின உழைப்பாளிகளான அதிகாரிகளை மனச்சோர்வடையச் செய்கிறார்கள். இந்த சூழலிலும் கண்ணியமாக நடந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்கேஎம்ஆர் ஜிதேஷ் வி பாட்டீலுக்கு எனது பாராட்டுகள்" என்று தெரிவித்தார்.

இந்த சூழலில்தான் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தெலங்கானாவில் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மேல் ‘மோடிஜி ரூ 1105’ என அச்சிட்டு பிரதமர் சிரிக்கும் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன், “ பிரதமர்மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள். இங்கே இருக்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் இந்த சிலிண்டர் புகைப்பட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in