ராமநாதபுரத்தில் மோடி?: ஆனந்த அதிர்ச்சியில் தமிழக பாஜகவினர்!

ராமநாதபுரத்தில் மோடி?: ஆனந்த அதிர்ச்சியில் தமிழக பாஜகவினர்!

2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்பதான பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. தமிழக அரசியலை பற்ற வைக்கும் அரசியல் இந்த சுவாரசியம் உறுதிசெய்யப்படும் முன்னரே பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக கட்சியால் தேர்வு செய்யப்பட்டதும், 2014 மக்களவை தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா என 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஆன்மிகத் தலமான வாரணாசி தொகுதியை வைத்துக்கொண்டு வதோதரா தொகுதியை விடுவித்தார். 2019 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நின்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று, இரண்டாம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.

அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தல் பாஜக மற்றும் மோடியை பொருத்தளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் பொருட்டு மோடி 2 தொகுதியில் நிற்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. வாரணாசியில் மோடியின் வெற்றி உறுதியானது என்ற போதும், வேறு சில காரணங்களுக்காக 2014 தேர்தல் பாணியில் 2 தொகுதிகளில் மோடியை நிறுத்த பாஜக தலைமை யோசிக்கிறது.

ஆன்மிக வழக்காடலில், காசி எனும்போதே ராமேஸ்வரம் என்பதும் தானாக சேர்ந்துகொள்ளும். அத்தகைய பெருமை வாய்ந்த ஆன்மிக தலமான காசி - ராமேஸ்வரம் இரண்டையும் இணைப்பதாக; 2 தொகுதிகளிலும் மோடியின் வெற்றி அமைய வேண்டும் என்று பாஜக யோசனைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டுள்ளது. மோடிக்கு அப்பால் தென்னிந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்கும் ராமநாதபுரம் தொகுதியின் வெற்றி உதவும் என்றும் ஒரு கணக்கு போடப்பட்டுள்ளது.

வடக்கே அகல கால்பரப்பியுள்ள பாஜக, தற்போது கர்நாடகத்தில் மட்டுமே காலூன்றி உள்ளது. அதிலும் தமிழகம், பாஜகவுக்கு எதிரான முனைப்பில் மும்முரமாக உள்ளது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் திமுக மற்றும் சகோதர கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் நின்று வெற்றி பெறுவது, இங்கே பாஜகவின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உதவும் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்த கணக்கு கடந்த, 2019 மக்களவை தேர்தலின்போதே பெருமளவில் பேசப்பட்டது. அதன்பொருட்டு ராமநாதபுரம் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் கமுக்கம் காத்தது. பின்னர் மோடியின் முடிவு மாறியதில், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது 2024 தேர்தலுக்கான ஆயத்த சூழலில் மீண்டும் இந்த விடயம் முணுமுணுக்கப்படுகிறது. தொகுதிகள் தோறும் வெற்றிக்கான சாதக, பாதகங்களை ஆய்வு செய்யும் பாஜக முன்னணி தலைவர்கள் அடங்கிய குழுவும், மோடி ராமநாதபுரத்தில் நிற்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாம்.

இவற்றோடு ஆங்கில அச்சு ஊடகம் ஒன்றும், ராமநாதபுரத்தில் மோடி நிற்பது தொடர்பாக கட்டுரை ஒன்றில் அலசியிருந்தது. தமிழகத்துக்கு பிரதமர் மோடி பயணம் வந்தாலே உற்சாகம் கொள்ளும் தமிழக பாஜகவினர், இதுபோன்ற தகவல்களால் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in