இன்று ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி... கர்நாடகாவில் பாஜகவின் கணக்கு என்ன?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு மே 7 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் மைசூரு, பெங்களூரு உட்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 69.23 சதவீத ஓட்டுகள் பதிவாகியது.

இதையடுத்து 2வது கட்டமாக மே 7 ம் தேதி கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது பெரும்பாலும் வடகர்நாடகாவில் உள்ள தொகுதிகளாகும். இந்த பகுதியில் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். ஆனாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், பாஜக ஆதரவு சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றது. இந்த சூழலில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. இந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக நினைக்கும் வெற்றி கர்நாடகாவில் கிடைக்காது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே இப்போது பிரதமர் மோடி கர்நாடக தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தேர்தல் நடைபெற உள்ள 14 தொகுதிகளிலும் வெல்லும் முனைப்பில் பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி பெலகாவி பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பெலகாவி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி
தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி

அதன்பிறகு உத்தர கன்னடா தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மதியம் 12 மணிக்கு பேசுகிறார். இதையடுத்த மதியம் 2 மணிக்கு தாவணகெரேவில் பேசும் பிரதமர் மோடி, அதன்பிறகு பாகல்கோட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் வட கர்நாடகா பகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கலபுரகி தொகுதியும் இப்பகுதியில்தான் உள்ளது.

அதோடு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்திய பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், மகளிர் இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸாக அமையலாம் என சொல்லப்படுகிறது. எனவே பிரதமர் மோடி இப்போது தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in