பிரதமர் மோடி இன்று துவக்கும் சொகுசுக் கப்பல்: உலகின் தொலைதூரம் பயணிக்கும் 'கங்கா விலாஸ்'

கங்கா விலாஸ் கப்பல்
கங்கா விலாஸ் கப்பல்

வாரணாசியிலிருந்து வங்கதேசம் வழியாக அசாமின் டிப்ருகருக்கு சொகுசுக் கப்பல் விடப்பட்டுள்ளது. உலகின் தொலை தூரம் பயணிக்கும் ‘கங்கா விலாஸ்’ எனும் பெயருடைய கப்பலை, இன்று (ஜன.13) பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இந்தியாவின் பெரும்பாலான ஆறுகளில் கப்பல் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. உள்நாடு போக்குவரத்திற்கு ஏற்றவகையில் அனைத்து கங்கை, யமுனை உள்ளிட்ட பெரும்பாலான நதிகளில் நீர்வரத்து அதிகமாகவும், தேவையான ஆழத்திலும் இருந்துள்ளது. இந்தநிலையில் சுதந்திரத்திற்குப் பிறகு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. ஆறுகளின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தன. அதன் நீரின் சுற்றுச்சூழலில் மாசுபாடுகளும் அதிகரித்தன. குறிப்பாக புனிதமான கங்கையைச் சுத்தம் செய்வது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு முடியாத காரியம் போலானது. இதற்காக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவாகின தவிர பலன் கிடைத்தபாடில்லை.

ஐந்து நட்சத்திர அந்தஸ்து

கடந்த 2014-ல் புனித கங்கை ஓடும் முக்கிய நகரமான வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல், அவர் கங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். கங்கையை மையப்படுத்தி பல திட்டங்களையும் வகுத்து வந்தார். இதில், ஒன்றாக புனித கங்கை ஆற்றில் நீர்வழிப்போக்குவரத்து அமைந்தது.

இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் இன்லேண்ட் வாட்டர்வேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (ஐடபிஸ்யுடபுள்யுஏஐ) எனும் அமைப்பு இறங்கி பணியாற்றியது. இந்தியாவின் நீர்வழித்தடங்கள் சட்டத்திலும் சொகுசுக் கப்பல்கள் மாநிலங்களைக் கடந்து செல்லும் வகையில் திருத்தம் செய்யப்பட்டன.

இதன் பலனாக, இன்று ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் கட்டமைக்கப்பட்ட தொலைதூரம் பயணத்திற்கான சொகுசுக் கப்பல் வாரணாசி முதல் அசாமின் டிப்ருகர் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சொகுசுக் கப்பல் அண்டை நாட்டில் நுழைய, நட்புறவு நாடனான வங்கதேசத்துடன் இந்தியா ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இட்டுள்ளது. இதே ஆற்றின் நீர்வழித்தடத்தில் ஏற்கெனவே, கொல்கத்தா முதல் ராஜ் மெஹல் வரையும் ஒரு சொகுசுக் கப்பல் சில வருடங்களாக சென்று வருகிறது. இவை உள்ளிட்ட இன்றைய சொகுசுக் கப்பலும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானவை.

36 பயணிகள்

இதுவன்றி, சரக்கு கப்பல்களின் சேவையும் புனிதகங்கையின் அமலில் உள்ளது. பிரதமர் மோடி துவக்கும் சொகுசுக் கப்பல், ஹெரிடேஜ் ரிவர் ஜர்னிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதன் சார்பிலேயே இயக்கப்படும் சொகுசுக் கப்பலுக்கு, ‘கங்கா விலாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது, சுமார் 4,000 கி,மீ தொலைவை இன்று கிளம்பி, 52 நாட்கள் பயணிக்கிறது. சுவிட்சர்லாந்தின் 36 பயணிகளுடன் செல்லும் கங்கா விலாஸ், அசாமின் டிப்ருகருக்கு மார்ச் 1-ல் சேருகிறது. வழியில் உபி, பிஹார், ஜார்கண்ட், மேற்குவங்கம் மற்றும் அசாம் என 5 மாநிலங்களும், நம் அண்டை நாடான வங்கதேசமும் வருகிறது.

18 அறைகள்

கொல்கத்தாவிற்கு சென்ற பின் இக்கப்பல், அதன் எல்லையிலுள்ள வங்கதேசத்தின் டாக்கா துறைமுகம் செல்லும். அங்கிருந்து பிரம்மபுத்திரா நதி வழியாக இந்தியாவில் அசாம் மாநிலத்தில் நுழைந்து டிப்ருகர் அடைகிறது. மொத்தம் 18 அறைகள் கொண்ட கப்பலில், இருவர் படுக்கும் வகையிலான சொகுசு படுக்கைகள் அமைந்திருக்கும். நட்சத்திர விடுதியில் கிடைக்கும் சர்வதேச உணவு வகைகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டணம் அதிகம் என்பதால் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் இதில் பயணம் கொள்வார்கள் என எதிர்நோக்கப்படுகிறது. கங்கா விலாஸின் பயணிகள், தங்களுக்குத் தேவையான நாட்கள் பயணத்திற்கு பின் வழியில் இறங்கிக் கொள்ளலாம். வழியிலும் அவர்கள் ஏறிக் கொள்ளலாம்.

இதன் முதல் பயணத்திலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து 36 பயணிகள் இடம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு மொழிகள் அறிந்த வழிகாட்டியுடன், கங்கா விலாஸில் பயணம் செய்கிறார். உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றவை உள்ளிட்ட சுமார் 50 சுற்றுலாப் பகுதிகள் இவர்களுக்கு வழியில் காட்டப்பட உள்ளன . ஆங்கிலேயர் காலம் முதல் 1960 ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவில் பயன்படுத்தி வந்தவகையில் இந்த கங்கா விலாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சொகுசுக் கப்பல் முழுக்க, முழுக்க இந்தியப் பொருட்களால் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.70 கோடி ஆகும். இதன் நீளம் 62.5 மீட்டர் அகலம் 12.8 மீட்டர். இதனுள் நீச்சல்குளம் தவிர்த்து ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள வசதிகள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன. தேகப்பயிற்சி, மசாஜ் பார்லர், உணவு விடுதிகள், நூலகம், திரையரங்கு போன்றவை இடம் பெற்றுள்ளன.

சுமார் அறுபதாயிரம் லிட்டர் அளவிலான நீர் கொள்ளவு கொண்ட இந்த சொகுசுக் கப்பல், மூன்று அடுக்கள் கொண்டது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டி, டீசலில் இயங்குகிறது. 15 முதல் 20 கி,மீ வேகத்தில் செல்லும் இந்த கங்கா விலாஸ், தொடர்ந்து 40 நாட்கள் இயங்கும் அளவில் டீசல் கொள்ளவு கொண்டுள்ளது. கங்கா விலாஸின் பயணத்திற்காக வரும் செப்டமர் முதல் பயணிகளுக்கான முன்பதிவு அடுத்த இரண்டு வருடங்களுக்காக தொடங்கப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in