தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது!- ஆளும் காங்கிரஸ் மீது மோடி ஆவேச தாக்கு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ராஜஸ்தானில் தீவிரவாதிகள் தலைதூக்குகிறார்கள்'' என பிரதமர் மோடி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

"ராஜஸ்தானில் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் கேட்டபோது, பெண்கள் பொய் புகார் கூறுகின்றனர் என விளக்கமளித்தார். கெலாட்டின் கூற்றை காங்கிரஸ் தலைமையும் ஏற்றுக் கொள்கிறது.  இப்படிப்பட்ட முதல்வர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பாரா? வரும் தேர்தலில் பெண்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

பா.ஜ.க. ஆளும் குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97-க்கு விற்கப்படுகிறது. ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109-க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.12-ஐ மக்களிடம் கொள்ளையடிக்கிறது காங்கிரஸ் அரசு. ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் காங்கிரசின் பெட்ரோல் கொள்ளை முடிவுக்கு வரும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் பரவியுள்ளது. ராம நவமி, ஹோலி போன்ற பண்டிகைகளை அமைதியாக கொண்டாட முடியவில்லை. இந்த பண்டிகைகளின் போது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், கலவரக்காரர்கள் தலைதூக்குகிறார்கள். இதற்கு காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலே காரணம்.

ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது குற்றமாக இருந்தால், அந்த குற்றத்திற்காக நான் சிறை செல்லவும் தயார்.

நிலவின் தெற்குப் பகுதியில் இந்தியா கால் பதித்துள்ளது. ஜி-20 மாநாடு சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பாஜக ஆட்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து பன்மடங்கு உயர்ந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் பின்னோக்கி செல்கிறது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும். மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலரும்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in