
மணிப்பூரில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. ஆனால் பிரதமரோ மணிப்பூர் மாநில மக்களை இளக்காரமாக பார்ப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘’குஜராத்தில் புயல் வரப்போவதற்கு 3 நாட்களுக்கு முன்னாடியே ஆய்வுக்கூட்டம் நடத்தி முன்னேற்பாடுகள் செய்து உயிர் சேதங்களை தவிர்க்க உத்தரவிட்ட பிரதமர், மணிப்பூர் மாநிலத்தில் 53 நாட்களாக கலவரம் நடக்கும் நிலையில் ஒருமுறை கூட அது குறித்து ஆய்வு நடத்தவில்லை. ஒரு நாள் கூட நேரில் செல்லவில்லை. ஒரு அறிக்கை கூட விடவில்லை. அங்கு நடக்கும் கலவரத்தில் அதிகாரபூர்வமாக 130 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு இரங்கல் அறிக்கை கூட விடவில்லை. இந்தநிலையில் அமெரிக்கா, எகிப்து சென்று வீர உரையாற்றுகிறார் பிரதமர். மணிப்பூரில் உள்நாட்டு போர் நடக்கிறது. ஆனால் பிரதமரோ மணிப்பூர் மக்களை துச்சமாக, இளக்காரமாக பார்க்கிறார்.
வெளிநாட்டின் தொழில் முதலீடுகள் எல்லாம் குஜராத்திலே நடக்கின்றன. மகாராஷ்டிராவில் முதலீடு செய்யவிருந்த வேதாந்தா நிறுவனம் அதனை குஜராத்திற்கு மாற்றியுள்ளது. இதேபோல் தைவான், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் குஜராத்தில் தங்கள் முதலீட்டை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மற்ற மாநிலங்களில் ஆளும் பாஜக முதல்வர்கள் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்தியாவிற்கு பிரதமரா அல்லது குஜராத்திற்கு பிரதமரா?’’ என கேள்வி எழுப்பினார்.