ஆட்சியருக்கு அழுத்தம்; அத்துமீறுகிறாரா ஞானதிரவியம் எம்.பி?

ஞானதிரவியம்
ஞானதிரவியம்

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதையைப் போல, அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத நெல்லை மாவட்டத்தில் குட்டி சர்க்காரே நடத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக எம்பி-யான ஞானதிரவியம்!

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் பெருவாரியான கல் குவாரிகளுக்கு ஞானதிரவியத்தின் பினாமிகளே சொந்தக்காரர்கள் என்கிறார்கள். கடந்த வாரம் நெல்லை வந்திருந்தார் அமைச்சர் சி.வி.கணேசன். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமைச்சர் முன்னிலையிலேயே, மூடப்பட்ட கல்குவாரிகளைத் திறக்கக்கோரி ஆட்சியருக்கு ஞானதிரவியம் அழுத்தம் கொடுத்த காட்சிகள் அரங்கேறின. ஒருகட்டத்தில் எல்லை கடந்து, குவாரிகளைத் திறக்கக்கோரி எதிர்கட்சியினரைப் போல் விமர்சிக்கத் தொடங்கினார் ஞானதிரவியம்.

நெல்லை ஆட்சியர் விஷ்ணு
நெல்லை ஆட்சியர் விஷ்ணு

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. கடந்த மே மாதம், 14-ம் தேதி இரவு இங்கு பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பலியானார்கள். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளையும் ஆய்வுசெய்து அறிக்கை தர நெல்லை ஆட்சியர் விஷ்ணு கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 53 கல் குவாரிகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் அனைத்து குவாரிகளும் தடைசெய்யப்பட்டன. அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை வெட்டிக் கொள்ளையடித்த 35-க்கும் அதிகமான குவாரிகளுக்கு மொத்தமாக 300 கோடி அபராதமும், 13 குவாரிகளின் விதிமீறலை மதிப்பிட்டு, அந்தக் குவாரிகள் செயல்பட ஏன் தடைவிதிக்கக் கூடாது என விளக்கம் கேட்டும் நோட்டீசும் அனுப்பியது மாவட்ட நிர்வாகம்.

விதிமீறல் குவாரிகளில் பெரும்பகுதியானவை ஞான திரவியத்தின் பினாமிகள் பெயரில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இவ்விஷயத்தில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பதற்றம் கவனிக்கத்தக்கது. குவாரி விபத்தில் நான்கு பேர் பலியாகும் முன்பே குவாரி முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.

கனிமச் சுரண்டலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து அபராதம் விதித்ததோடு, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரிகளையும் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். இதற்காக அவர்களுக்கு பாராட்டு கிடைக்கவேண்டியதற்கு பதிலாக பணியிடமாற்றமே பரிசாகக் கிடைத்தது. அபராதம் விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குவாரி உரிமையாளர் இசக்கியப்பன் ஞானதிரவியத்தின் தீவிர ஆதரவாளர். அது தெரிந்தும் அவருக்கு ரூ.20 கோடி அபராதம் விதித்தது ஞானதிரவியத்தை ஏகத்துக்கும் உஷ்ணப்படுத்திவிட்டதாம். அதுவே, முந்தைய எஸ்.பி-யான மணிவண்ணன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் இடமாற்றத்திற்கும் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில் தான், நான்கு பேர் பலியான விபத்தை துடுப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு ஆக்‌ஷனில் இறகினார் நெல்லை ஆட்சியர் விஷ்ணு. இளைஞரான விஷ்ணு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பயணிக்கிறார். மாவட்ட மக்களின் அபிமானமும் அவர்மேல் இருப்பதால் தலைமையிடம் சொல்லி மாற்றவும் முடியாமல், மூடிய குவாரிகளைத் திறக்கவும் வழியில்லாமல் தவியாய்த் தவிக்கிறார்கள் ஆளும்கட்சி புள்ளிகள். அந்த ஆற்றாமையின் உச்சம் தான் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்பட்டது என்று சொல்பவர்களும் உண்டு!

ஞான திரவியத்தை கண்டிக்கும் அமைச்சர்
ஞான திரவியத்தை கண்டிக்கும் அமைச்சர்

அமைச்சர் சி.வி.கணேசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் விஷ்ணு, ஞானதிரவியம் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது குவாரிகள் திறப்பு பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அமைச்சர், “ முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உடனே அப்பாவு, “ஆட்சியர் பதில் சொல்லட்டும்” என்று பேட்டியை மடைமாற்றிவிட்டார். ”பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என ஆட்சியர் சொன்னதும், அப்பாவு செய்தியாளரைப் போல் “எவ்வளவு நாளில் நடக்கும்?” எனத் துணைக் கேள்வி எழுப்பினார். “அதை உறுதியாக இப்போது சொல்லமுடியாது” என சமாளித்தார் ஆட்சியர்.

அப்போது குறுக்கிட்ட ஞானதிரவியம், “குவாரிகளை மூடி 60 நாள் ஆகிவிட்டது. எந்த முடிவும் இல்லாமல் இருக்கிறது. கலெக்டரை பதில் சொல்லச் சொல்லுங்க” என அமைச்சரிடம் முறையிட்டார் சற்றே குரலை உயர்த்தி. மீண்டும் அமைச்சர், “முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, “ஏதோ ஒரு இன்சிடென்ட் நடந்துருச்சு. அதுக்காக இப்படியா?” என பேசத் தொடங்கினார் ஞானதிரவியம். உடனே அமைச்சர், “அட கம்முன்னு இருங்கண்ணே... உங்க வீடா இது?” என கோபம் காட்டிவிட்டு பேட்டியைத் தொடர்ந்தார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கும் ஞானதிரவியம் சர்ச்சைகளாலேயே வளர்ந்தவர். திமுகவில் தன்னைப் படிபடியாக வளர்த்துக் கொண்டவரின் அரசியல் பாதை குறித்து நெல்லை திமுக வட்டாரத்தில் பேசினோம்.

“ஆரம்பத்தில் அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர் ஞானதிரவியம். ஆதீனமடச் சொத்துகளை ஆக்கிரமித்தது தொடங்கி, பல்வேறு நிலமோசடி புகார்களும் இவர்மீது உண்டு. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ராதாபுரம் பாஜக பிரமுகரைத் தாக்கியதாகவும் இவர் மீது சர்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து பொன்.ராதாகிருஷ்ணனே களத்திற்கு வந்துபோராடினார்.

ஞானதிரவியம் பணக்குடி, பழவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றாலைகள் அமைத்தன் வாயிலாக வளத்தைக் குவித்தார். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரது நிறுவனத்திற்கு சொந்தமாக பல காற்றாலைகள் உள்ளன. கோவையிலும் இவருக்கு நிறைய தொழில்கள் உள்ளது. கன்னியாகுமரியில் சொந்தமாக ரிசார்ட் வைத்துள்ளார். நெல்லையில் இருக்கும் பெரும்பான்மை கல் குவாரிகள் இவரது கண்ணசைவில் இவர் சொல்படி இயங்குபவை. இது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். தொழிலில் வளம் கொழிக்கும் திரவியம் இப்போது அதை வைத்து அரசியலிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறார். இவரது மகன் சேவியர் ராஜா தான் இப்போது வள்ளியூர் ஒன்றியப் பெருந்தலைவராக இருக்கிறார்.

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் அப்துல்வகாப் எம்எல்ஏ., அமைச்சர் கனவில் இருக்கிறார். அவர் அமைச்சரானால், தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைக்கிறார் சபாநாயகர் அப்பாவு. அதனாலேயே மத்திய மாவட்ட திமுகவில் தனக்கென ஒரு அணியை வைத்திருக்கிறார் அவர். அதில் ஞானதிரவியம் முதன்மை இடத்தில் இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏ-வான மாலைராஜாவும் இவர்கள் அணியில் இருந்து கொண்டு வகாப்பிற்கு பலவகையிலும் செக் வைக்கிறார். சட்டப்பேரவையையே நடத்தத் தெரிந்த அப்பாவுவுக்கு ஞான திரவியத்தை அடக்கும் வித்தை தெரியாதா? ஆனால், தனக்கு பக்கபலமாக நிற்கிறார் என்பதால் அவருக்காக இவரே பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிறார்” என்கிறார்கள் உள்நடப்பு அறிந்த உடன்பிறப்புகள்!

இவ்விவகாரம் குறித்து விளக்கம்பெற ஞானதிரவியம் எம்பி-யிடம் பேசினோம். “குவாரிகள் மூடியிருப்பதால் லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அதனால் தான் அதைப்பற்றிப் பேசினேன். என்னைப் பிடிக்காதவர்கள் ஆயிரம் சொல்வார்கள். மற்ற தகவல்களுக்கு நேரில் வந்து பேசுங்க” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

”திமுகவினரே தவறு செய்தாலும் சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டும்” என சத்தம்போட்டுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும் அத்துமீறல்கள் தொடரத்தான் செய்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in