'எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக இருக்க மாட்டேன்': குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சரத் பவார் திட்டவட்டம்!

'எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக இருக்க மாட்டேன்': குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சரத் பவார் திட்டவட்டம்!
சரத் பவார்

மும்பையில் நேற்று மாலை நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், "நான் குடியரசுத் தலைவர் போட்டியில் இல்லை, நான் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக இருக்க மாட்டேன்" என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய அக்கட்சியின் மாநில அமைச்சர் ஒருவர், "அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. சரத் பவார் மக்களைச் சந்திப்பதை விரும்பும் ஒரு மக்கள் மனிதர். அவர் ராஷ்டிரபதி பவனில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்" என்று கூறினார்

மேலும், எதிர்க்கட்சிகள் தனது வேட்பாளரை வெற்றிபெற வைக்க தேவையான எண்ணிக்கையைத் திரட்ட முடியும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தோல்வியுற்ற போரில் போட்டியிட அவருக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை சரத் பவாரை குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக நிறுத்த விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த வியாழன் அன்று சரத் பவாரை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார். ஆம் ஆத்மி கட்சிக்கும் பவாரை வேட்பாளராக்க விருப்பம் உள்ளது. இதற்கு சரத் பவார் விருப்பம் தெரிவித்தால் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் சரத் பவாருடன் மம்தா...
மும்பையில் சரத் பவாருடன் மம்தா...

சமீபத்திய மகாராஷ்டிரா மாநிலங்களவைத் தேர்தலில் சிவசேனாவின் வேட்பாளரை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றதில் மகாராஷ்ட்டிராவின் ஆளும் கூட்டணியாக மகா விகாஸ் அகாடி பெரும் அடியை சந்தித்தது. சிவசேனாவை ஆதரிப்பதாக உறுதியளித்த பல சுயேச்சை எம்எல்ஏக்கள் கடைசியில் பாஜகவை ஆதரித்தால் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பெரும் அதிர்ச்சியடைந்தன. எனவே, குடியரசுத் தலைவர் போட்டியில் இறங்க சரத் பவார் விருப்பமின்றி இருக்கிறார் என சொல்லப்படுகிறது, ஆனால் அவர் இந்த முடிவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in