ரன் அவுட் ஆன ராவ் - கேஜ்ரிவால் வியூகம்!

காங்கிரசையும் கட்டுப்பட வைத்த மம்தாவின் முயற்சி கைகூடுமா?
ரன் அவுட் ஆன ராவ் - கேஜ்ரிவால் வியூகம்!

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து தேசிய அளவில் நிகழ்ந்துவரும் அரசியல் நகர்வுகள், எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இந்தத் தேர்தலில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிற கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகத் தங்களைக் காட்டிக்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் முதல் கட்டமாக முந்தியிருக்கிறார் மம்தா.

சந்திரசேகர் ராவின் திட்டம் என்ன?

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே தேசிய அரசியலில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, அவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்குக் கடும் போட்டியாக பாஜக வளர்ந்துவருவது அவரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக தெலங்கானாவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் அவர் களமாடிவருகிறார். கூடவே, காங்கிரஸையும் எதிர்க்கிறார்.

இதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட பல தலைவர்களையும் அவர் சந்தித்தார். இதில் இதுவரை அவருக்குப் பெரிய வெற்றி எதுவும் கிடைத்துவிடவில்லை.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துக் காட்டுவதன் மூலம் தேசிய அளவில் தனது பிம்பத்தை உயர்த்திக்காட்ட வேண்டும் என சந்திரசேகர் ராவ் திட்டமிட்டார். பாஜகவுக்குக் கடும் போட்டி கொடுக்கும் தலைவர் தான்தான் என்பதை நிரூபிப்பதும் அவரின் எண்ணமாக இருந்தது. 2023-ல் நடக்கவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்த முயற்சி கைகொடுக்கும் என அவர் நம்பினார். ஆனால், இதுவரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தெலங்கானாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் போதிய கட்டமைப்பு இல்லை. ஆனாலும், அதீத தன்னம்பிக்கையுடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது செல்வாக்கைக் காட்ட முயன்றார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை!

கேஜ்ரிவாலின் தேசிய கணக்கு

ஆம் ஆத்மி கட்சி தற்போது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளது. ஏனென்றால் டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போது பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சி ஆம் ஆத்மிதான். மேலும், தேர்தலைச் சந்திக்கவுள்ள இமாசல பிரதேசம், குஜராத், காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த மாநிலங்களில் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி கலந்துகொள்ளும் அர்விந்த் கேஜ்ரிவால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேசிய அளவில் பல தேர்தல்களை எதிர்கொள்ளவுள்ள ஆம் ஆத்மி கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து காண்பித்தால் தனது ‘தேசிய இமேஜ்’ மேலும் வலுவடையும் எனவும், பாஜகவுக்கு சரியான போட்டி தங்கள் கட்சிதான் என்பதை உணர்த்தும் என சந்திரசேகர் ராவ் பாணியிலேயே கேஜ்ரிவாலும் கணக்கு போட்டார். இதற்கு அச்சாரமாக அவ்வப்போது சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் முதன் முதலாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த, அவரைச் சந்தித்துப் பேசினார் ஆம் ஆத்மி எம்.பி-யான சஞ்சய் சிங். ஆனால், சரத் பவார் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் ஆம் ஆத்மி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போலவே ஆம் ஆத்மி கட்சியும் அடக்கி வாசிக்க நேர்ந்தது.

காங்கிரசின் நிலை என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் 42.26 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள பாஜகவுக்கு அடுத்தபடியாக, 13.63 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள தனிப்பெரும் கட்சி காங்கிரஸ்தான். எனவே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மாற்று தாங்கள்தான் என நிரூபிக்க வேண்டிய தேவை அந்தக் கட்சிக்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் அதற்குச் சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம்.

முதல் காரணம், அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ளார். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான சிக்கல்களில் உள்ளார். இரண்டாவது காரணம், தற்போது இந்திய அளவில் அதிக வாக்குவங்கி வைத்துள்ள ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜ்வாதி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பு மன நிலையிலேயே உள்ளன. எனவே, தாம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை முன்னெடுத்தால் அது முற்றிலுமாக சிதறிப்போய், எதிர்ப்பே இல்லாமல் பாஜக வேட்பாளர் வெற்றி பெறும் சூழல் உருவாகுமோ என்ற பயம் காங்கிரசிடம் இருக்கிறது.

இந்தச் சூழலில்தான் மம்தா பானர்ஜியின் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் கலந்துகொண்டது காங்கிரஸ். கூடவே, ‘எங்கள் மனதில் எந்த வேட்பாளரும் இல்லை, எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளரை ஏற்றுக்கொள்வோம்’ என அறிவித்துவிட்டு அடுத்தகட்ட வேலைகளில் இறங்கிவிட்டது.

களத்தில் முந்திய தீதி

தேசிய அரசியல் களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அரசியல் தலைவர் மம்தா பானர்ஜிதான். மாநிலங்கள் அளவிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதல் ஆளாகக் குரல் கொடுக்கும் மம்தா, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவையும் பராமரித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரே தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கினாலும், 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அவருக்குக் கொடுத்த குடைச்சலுக்குப் பிறகு அது தீவிரமடைந்தது. அதற்கு முன்னரே சில மாநிலங்களில் வலுவான நிலையில் இருந்தாலும், அதற்குப் பின்னர் மேலும் பல மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பைக் கூடுதலாக ஸ்திரப்படுத்தியது திரிணமுல் காங்கிரஸ்.

சோனியா காந்தி, சந்திரசேகர் ராவ், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சில முன்னெடுப்புகளைத் தொடங்கிய சூழலில், அதிரடியாக 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார் மம்தா. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ல் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திமுக, சமாஜ்வாதி, ஆர்எல்டி, சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் கலந்துகொள்ளாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி கலந்துகொண்டதாலேயே இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்ததாக இரு கட்சிகளும் காரணம் கூறின. ஆனாலும் தாங்கள் முன்னெடுத்த விஷயத்தில் அதிரடியாக களமிறங்கி மம்தா ஸ்கோர் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம் ராவிடமும் கேஜ்ரிவாலிடமும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எதனால் வென்றார் மம்தா?

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என நான்கு கட்சிகளுக்கும் பொது எதிரி பாஜக தான். சந்திரசேகர் ராவும் கேஜ்ரிவாலும் காங்கிரஸ் அல்லாத பிற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்தனர். ஆனால், திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் 24.02 சதவீத வாக்குகளை வைத்துள்ளது.

எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத அணியை அமைத்தால் அது மும்முனைப் போட்டிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்த மம்தா, காங்கிரசையும் இணைத்து ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதுதான் மம்தாவால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடிந்த காரணம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 48.67 சதவீத வாக்குகள் உள்ளன, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிறக்கட்சிகளின் வாக்குகள் 51.33 சதவீதம் ஆகும். இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எனச் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் மம்தா ஒருங்கிணைக்கும் பொது வேட்பாளர் எதிர்க்கட்சிகளின் முழுமையான வாக்குகளைப் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மம்தாவின் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்குமா, இதன் மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அரசியல் கூட்டணி வலுப்பெறுமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in