
சென்னை கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வருகிறார்.
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை 6 மணிக்கு விமானப்படை தனி விமானம் மூலம் புறப்பட இருக்கிறார்.
மாலை 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வரும் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை செல்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க இருக்கும் அவர் நாளை காலை 9 முதல் 9.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் சந்திக்க இருக்கிறார்.
இதன் பிறகு கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார். இதை தொடர்ந்து நாளை பகல் 11.55 மணிக்கு பழைய விமான நிலையம் செல்லும் அவர், 12.05 மணிக்கு விமானப்படையின் தனி விமானம் மூலமாக டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.