இனி ஆள்மாறாட்டம், மோசடி செய்தால் உடனே ரத்து: தமிழக அரசின் ஆவணப் பதிவு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இனி ஆள்மாறாட்டம், மோசடி செய்தால் உடனே ரத்து: தமிழக அரசின் ஆவணப் பதிவு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

போலி ஆவணம், மோசடி போன்றவற்றின் மூலம் செய்யப்படும் ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நில மோசடி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் போன்றவற்றின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்து வருவது அதிக அளவில் உள்ளது. அதுபோல் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யப் பதிவுச் சட்டம், 1908-ல் தற்போதைய நிலையில் பதிவு செய்த அலுவலருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. இதனால் மோசடி பதிவுகளால் சொத்துகளை இழந்தவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். நில மோசடிகள் தொடர்ந்து வந்த நிலையில் ஆள்மாறாட்டம், மோசடி போன்ற காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டப் பேரவையில் 2021-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம், போலி பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறை தலைவரிடமிருந்து, சார் பதிவாளருக்கு வழங்க வழிவகை செய்கிறது. அந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்ததன் மூலம் புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவு 22(பி) பிரிவானது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்கப் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் பிரிவு 77(ஏ) பிரிவானது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனுக்கள் பெறப்பட்டால் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரித்து, மோசடி உறுதி செய்யப்பட்டால் அந்த ஆவணத்தை ரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். மேலும் சரிவர ஆராயாமல் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் பதிவு அலுவலர்கள் மற்றும் ஆவணதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட திருத்தத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in