
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கிண்டி பன்னோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஜுன் 15-ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளுக்கு கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன், 51,429 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய், குடல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. மேலும் 1,000 படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாட வேண்டும் என ஏற்கெனவே திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஓர் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு கடந்த 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற திரௌபதி முர்மு ஜூன் 5-ம் தேதி சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஒரு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை திமுக புறக்கணித்த நிலையில், திரௌபதி முர்மூவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், குடியரசு தலைவரின் வெளிநாட்டு பயணம் காரணமாக சென்னைக்கு வரும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜூன் 5-ம் தேதி வர இருந்த பயணத்திட்டம் ரத்தான நிலையில் தற்போது ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ புதிதாக கட்டப்பட்டுள்ள கிண்டி உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.