சமூக சேவையில் ஈடுபடுங்கள்... மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!

குடியரசுத்தலைவர்
திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

கல்வி கற்பதோடு சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசுகையில், ”காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். நமது இளைஞர்கள் கல்வி மற்றும் அமைதியை நோக்கி செல்லும் அளவுக்கு நம் நாடு முன்னேறும். வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தின் பாதையை இளைஞர்கள் பின்பற்றும் நாடு முன்னேற்றம் மற்றும் செழுமையின் பாதையை நோக்கி நகரும்.

காஷ்மீர் பல்கலைகழகத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
காஷ்மீர் பல்கலைகழகத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

காஷ்மீரில் இயற்கை அழகு நிறைந்து காணப்படுகிறது. பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் எண்ணிக்கை 55 சதவீதம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், சுமார் 65 சதவீதம் பேர் பெண்கள். இது நமது நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. நமது நாட்டின் தலைமைப் பதவிகளை ஏற்பதில் பெண்கள் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய குடியரசுத் தலைவர்
மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய குடியரசுத் தலைவர்

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி கற்பதோடு சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை மாணவர்கள் கொண்டுவர முடியும் என்பதோடு சிறந்த முன்மாதிரியையும் ஏற்படுத்த முடியும்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் படித்த பல மாணவர்கள் சமூகத்துக்கு தொண்டாற்றி தாங்கள் புகழ்பெற்றிருப்பதோடு, தாங்கள் படித்த கல்வி நிறுவனத்துக்கும் புகழ் சேர்த்துள்ளனர். மாணவர்கள் நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அறியும் வகையிலும் நமது மண்ணுக்கேற்ற கல்விமுறையாக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியா வளமிக்கதாக இருக்கும்” என்றார். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பட்டம் பெற்ற மாணவர்களுடன் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு
பட்டம் பெற்ற மாணவர்களுடன் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in