ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம் - தற்போதைய நிலவரம் என்ன?

வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் வாக்கு எந்திரங்கள்
வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் வாக்கு எந்திரங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஆயத்தப் பணிகள் ஜரூர்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான  இடைத்தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்கள் கொண்டும் செல்லும் பணி உள்ளிட்ட ஆயத்தப் பணிகள்  விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்  நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இங்கு திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உட்பட மொத்தம்  77 பேர் போட்டியிடுகின்றனர். 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களில் சாய்தளம், குடிநீர், சாமியானா பந்தல் உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈவிஎம்), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி  மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,  இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in