`நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள் அண்ணாமலை'- பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா
பிரேமலதா

பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதைத் தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடவேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நூல் விலை உயர்வு காரணமாக இது சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிலை நம்பி இருந்த பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வுக்கான ஆட்சியில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் ஒருவரையொருவர் மாற்றிமாற்றி குற்றம் சொல்ல கூடாது. பதுக்கல் பருத்தியை வெளிக்கொணர்ந்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்று உலகத்தில் இந்தியா ஜவுளித் துறையில் 3-ம் இடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 19.4 சதவீதம் ஏற்றுமதியில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவை, திருப்பூரின் நிலைமை தற்போது வேறுமாதிரியாக உள்ளது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், நகை திருட்டு குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஓராண்டில் நூறாண்டு சாதனை எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஏதாவது ஒரு மாற்றத்தை அவர்களால் சொல்லமுடியுமா? தேர்தலின் போது அறிவித்த பெண்களுக்கான இரண்டு முக்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சியிலும் கருணாநிதி ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகக் கூறினார். அதே நிலையில்தான் ஸ்டாலின் வாக்குறுதிகளும் கிடப்பில் கிடக்கின்றன. மக்களுக்கு எதைக் கொடுக்க முடியுமோ அதைத்தான் வாக்குறுதியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களின் பேராதரவோடு செயல்படும் அம்மா உணவகத்தை இந்த அரசு தொடரவேண்டும். பெயர் நெருடலாக இருந்தால் கலைஞர் என்ற பெயரைக் கூட மாற்றிக் கொள்ளுங்கள்.

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சொத்துவரி, மின் கட்டணம் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வை சாமானியர்கள் எப்படிச் சமாளிப்பார்கள். தேர்தலின் போது ஐந்நூறுக்கும் ஆயிரத்திற்கும் மக்கள் விலை போனதால்தான் இவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்கிறார். சொல்கிறாரே தவிர அப்படியே விட்டு விடுகிறார். இரண்டு நாள் ரெய்டு நடந்ததாக பேப்பரில் மட்டும் வரும். அரசியலில் எல்லாமே போலித்தனமாக இருக்கிறது. அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in