குஜராத் ராஜ்ஜியத்தை தக்கவைக்குமா பாஜக?: கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

குஜராத் ராஜ்ஜியத்தை தக்கவைக்குமா பாஜக?: கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

குஜராத் மாநிலத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட சூட்டில் கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

குஜராத் சட்டமன்றத்தில் வெற்றியை தக்க வைப்பது என்பது பாஜகவின் கௌரவ பிரச்சினை. மோடி குஜராத் முதல்வராக அமர்வதற்கு முன்பிருந்தே, அதாவது 1995 முதலே அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என தற்போதைய மத்திய அரசை முன்னெடுக்கும் இரட்டை குழல் துப்பாக்கிகள் குஜராத் மண்ணை சேர்ந்தவர்கள். இதனால் பெருவாரியான இடங்கள் மற்றும் வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றியை தக்க வைக்கும் நெருக்கடி பாஜகவுக்கு நேரிட்டிருக்கிறது.

இந்த சூழலில் குஜராத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பானதுமே அங்கு தேர்தல் ஜூரம் பற்றிக்கொண்டது. அவற்றின் அங்கமாய் கருத்துக்கணிப்புகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஏபிபி சி-ஓட்டர் சர்வே வெளியாகி உள்ளது. இதன் முடிவுகளில் பாஜகவைவிட அதன் அரசியல் போட்டியாளர்களான ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரசுக்கு அதிக சேதிகள் காத்திருக்கின்றன. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை போட்டிபோட்டு இந்த 2 எதிர்க்கட்சிகளும் பங்கு பிரிப்பதால் குஜராத்தில் பாஜகவின் வெற்றி இலகுவாகும் என்ற ஊரறிந்த உண்மையை கருத்துக்கணிப்பு உறுதி செய்திருக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி பாஜக 56% ஆதாயத்துடன் ஆட்சியை தக்க வைக்கும். எதிர் வரிசையில் ஆஆக 20% மற்றும் காங்கிரஸ் 17% வெற்றிகளை பெறும் என்கிறது சர்வே. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்ற ஆம் ஆத்மி கட்சியின் கூற்று பலிக்க வாய்ப்பாகிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்தவகையில் ஆஆக, பாஜகவின் பி டீம் என்ற காங்கிரஸின் வாக்கும் பலிதமாகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சி அமைத்திருக்கும் ஆஆக-க்கு குஜராத் முடிவுகள் உத்வேகம் அளிப்பதாக அமையக்கூடும். காங்கிரஸ் செவிமெடுக்காது போனாலும் அதற்கான பாடங்கள் வழக்கம்போல குஜராத் வாரி வழங்கத் தயாராகி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் டிச.1 மற்றும் டிச.5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. டிச.8 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in