காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர்: காட்சிகள் மாறுகின்றனவா?

காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர்: காட்சிகள் மாறுகின்றனவா?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 100 இடங்களில் வென்றால் தேர்தல் வியூக வகுப்பு வேலையைத் துறந்துவிடுவதாகச் சவால் விட்டவர் ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். அந்தத் தேர்தலில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வென்று ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இப்போது வியூக வகுப்பைக் கைவிட்டுவிட்டு முழு நேர அரசியல் தலைவராக அவர் மீண்டும் களமிறங்கத் தயாராகிறாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கெனவே, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அங்கம் வகித்த பிரசாந்த், தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கெனவே ஒருமுறை காங்கிரஸில் சேர முயற்சித்து, கட்சித் தலைமை ஆர்வம் காட்டாததால் அந்த முடிவைக் கைவிட்ட பிரசாந்த் கிஷோர், இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் போன்ற காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது முகுல் வாஸ்னிக், அம்பிகா சோனி, திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தலைமையும் பிரசாந்த் கிஷோரும் இதற்கு முன்னர் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இப்போது இரு தரப்பும் நெருங்கிவருகின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய அம்சங்கள் குறித்து அக்கட்சித் தலைவர்களிடம் அவர் எடுத்துரைத்திருக்கிறார். அதேசமயம், வெறுமனே வியூகம் வகுப்பதைத் தாண்டி கட்சியிலேயே சேர்ந்துவிடுமாறு காங்கிரஸ் தலைமை அவரிடம் கூறியதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த அகமது படேல் மறைந்த பின்னர், அவரது இடத்துக்கு வேறு யாரும் வர முடியவில்லை. ஒருவேளை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர்ந்தால் அகமது படேலின் இடத்தை நிரப்புவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இதற்கிடையே, 2023-ல் நடைபெறவிருக்கும் தெலங்கானா, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேர்தல் வியூக வகுப்புக்காக சுனில் கனுகோலுவுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது காங்கிரஸ். அதேசமயம், குஜராத்தில், வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் பிரசாந்த் கிஷோர் முன்வந்ததாகக் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பிரசாந்த் கிஷோர் முன்வைத்துவந்த நிலையிலும், அவருடனான பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் சுணக்கம் காட்டவில்லை.

எனினும், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைத் தாண்டி 2024 மக்களவைத் தேர்தல் குறித்துதான் பிரசாந்த் கிஷோர் அதிக கவனம் குவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்குள் நுழைய ஏன் பிரசாந்த் கிஷோர் திட்டமிடுகிறார் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. 2014, 2019 என தொடர்ந்து மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாஜகவுக்கு 2024 தேர்தல் சவாலாகத்தான் இருக்கும் என பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். பஞ்சாப் வெற்றிக்குப் பின்னர், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. எனினும், தேசிய அளவில் ஆம் ஆத்மியைவிடவும் பல மடங்கு வாக்கு சதவீதத்தைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவை வீழ்த்த முடியும் என பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். மூன்றாவது அணியால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனும் கருத்திலும் அவர் உறுதியாக இருக்கிறார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2011-ல் அவரைச் சந்தித்தார் பிரசாந்த். அப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணத்தில் மோடியே இருக்கவில்லை. ஆனால், 2013-ல் அதற்கான வேலைகளை பாஜக முன்னெடுத்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் பிரசாந்த். அவரது வியூகங்கள் மிகப் பெரிய பலனைத் தந்தன.

மோடி தொடங்கி நிதீஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், கேப்டன் அமரீந்தர் சிங், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் என அவர் வெற்றிபெற வைத்த தலைவர்களின் பட்டியல் நீளமானது. எனவே, ‘கை’யுடன் அவர் கைகோத்தால் நிச்சயம் அரசியல் களம் மாறும். கட்சியில் இணைந்து அந்த மாற்றங்களை முன்னெடுப்பாரா அல்லது வழக்கம் போல் வியூகம் வகுத்துத் தருவாரா என்பதுதான் முக்கியமான கேள்வி.

காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் கைகோப்பது குறித்து இதற்கு முன்னர் பல தகவல்கள் வெளியானாலும் எதுவும் அதிகாரபூர்வமாக இறுதிசெய்யப்படவில்லை. ஒருவேளை இந்த முறை இரு தரப்பும் இணைந்தால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in