பிஹாருக்குத் திரும்பும் பிரசாந்த் கிஷோர்: புதுக் கட்சி தொடங்குகிறாரா?

பிஹாருக்குத் திரும்பும் பிரசாந்த் கிஷோர்: புதுக் கட்சி தொடங்குகிறாரா?

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான முயற்சியைக் கைவிட்டுவிட்ட ஐ-பேக் நிறுவனர், அடுத்து என்ன முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில், இன்று காலை அவர் எழுதியிருக்கும் ட்வீட், மேலும் பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த வியூகங்கள் வகுப்பது, கட்சியில் மாற்றங்கள் செய்வது என்பன உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து பிரசாந்த் கிஷோரை அழைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசித்துவந்தனர். கட்சியில் அவர் இணையக்கூடும் எனும் தகவலும் வெளியானது.

2017 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்குத் தேர்தல் வியூகம் வகுத்துத் தந்தது பிரசாந்த் கிஷோர்தான். அந்தத் தேர்தலில் அவரது வியூகங்கள் எடுபடவில்லை. காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி படுதோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் தனக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு காங்கிரஸில் இணைய அவர் முயற்சித்தபோது அதில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தொடர் தோல்விகள், உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜி-23 தலைவர்கள் அளித்துவந்த நெருக்கடி ஆகியவற்றைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோருடன் பேச சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் முன்வந்தனர். சோனியா காந்தி குடும்பத்தினருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இணைந்து பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முறையும் ராகுல் காந்தி அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும், பிரசாந்த் கிஷோர் முன்வைத்த யோசனைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சோனியா காந்தி, அதை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார்.

எனினும், தேர்தல் வியூகம் என்பதைத் தாண்டி, கட்சியில் அவரைச் சேர்த்துக்கொள்ள காங்கிரஸில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டினர். காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், ஐ-பேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் தேர்தல் வியூகப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டதையும், அதற்காக பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத் சென்றிருந்தையும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். கூடவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான அவரது உறவும் காங்கிரஸ் கட்சியினரின் அதிருப்திக்கு இன்னொரு காரணம். இதற்கு முன்பு, அமித் ஷாவின் பரிந்துரையின்படி ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பதால் பிரசாந்த் கிஷோர் மீது காங்கிரஸ் கட்சியினர் சந்தேகத்திலேயே இருந்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவரின் அரசியல் செயலாளர் பதவி அல்லது கட்சியின் துணைத் தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கோரியதாகவும், ஆனால் அதிகாரமளிக்கப்பட்ட செயற் குழுவில் இணைந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை அவரைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்திக்கு மட்டுமே விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தனக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் விரும்பினார். காங்கிரஸ் தலைமை அவரது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், காங்கிரஸில் சேரும் முடிவை அவர் கைவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்பதை ஏப்ரல் 26-ல் பிரசாந்த் கிஷோர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் இன்று அவர் வெளியிட்டிருக்கும் முதல் ட்வீட்டே பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

‘ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க வேண்டும் என்பதும், 10 ஆண்டுகால ரோலர்கோஸ்டர் பயணத்துக்கு இட்டுச் செல்லும் வகையிலான மக்கள் நலக் கொள்கையை வடிவமைக்க உதவுவதும்தான் எனது தேடல்’ என்று குறிப்பிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், நல்ல நிர்வாகத்தை வழங்கக்கூடிய பாதைக்கு இட்டுச் செல்லும் நிஜமான எஜமானர்களிடம் செல்ல வேண்டிய நேரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே, ‘தொடக்கம் பிஹாரிலிருந்து’ என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிஹாரில் பிரசாந்த்

ஐக்கிய ஜனதா கட்சியில் சேர்ந்து நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசில் அங்கம் வகித்த அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நிதீஷ் குமார் ஆதரவளித்ததைக் கடுமையாக விமர்சித்ததற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, “வளர்ச்சி பெற்ற மாநிலமாக பிஹாரைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வளர்ச்சிப் பட்டியலில் 22-வது இடத்தில் இருக்கும் பிஹாரை, டாப் 10 மாநிலங்களில் ஒன்றாக மாற்ற விரும்புகிறேன்” என்று பிரசாந்த் கிஷோர் சூளுரைத்தார்.

பிஹாரைச் சேர்ந்தவரான பிரசாந்த் கிஷோர், ‘பாத் பிஹார் கி’ (பிஹாரைப் பற்றிப் பேசுவோம்) எனும் முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் 100 நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிதீஷ் குமார் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்தார். 58 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்களைக் கொண்ட பிஹாரில், இளைஞர்களைக் குறிவைத்து இயங்க முடிவெடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துத் தருவதில் முனைப்புடன் இருந்த அவர், தற்போது மீண்டும் பிஹாருக்குத் திரும்புகிறார்.

அதேசமயம் அவர் புதிய கட்சி தொடங்குகிறாரா அல்லது எதிர்க்கட்சியில் சேர்கிறாரா என்பது குறித்து அவரது ட்வீட்டில் எதுவும் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in