‘பிரசாந்த் கிஷோர் எங்களைவிட்டுப் பிரியவில்லை!’ - மம்தா பானர்ஜி தகவல்

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், அக்கட்சி முன்வைத்த யோசனையை ஏற்க மறுத்து அந்த முடிவைக் கைவிட்டுவிட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான அவரது உறவு பற்றியும் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுதொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறார் திரிணமூல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.

அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த வியூகங்கள் வகுப்பது, கட்சியில் மாற்றங்கள் செய்வது என்பன உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து பிரசாந்த் கிஷோரை அழைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசித்துவந்தனர். கட்சியில் அவர் இணையக்கூடும் எனும் தகவலும் வெளியானது.

காங்கிரஸ் தலைவரின் அரசியல் செயலாளர் பதவி அல்லது கட்சியின் துணைத் தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கோரியதாகவும், ஆனால் அதிகாரமளிக்கப்பட்ட செயற் குழுவில் இணைந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை அவரைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்த அவர் காங்கிரஸில் சேரும் முடிவைக் கைவிட்டுவிட்டார்.

தேர்தல் வியூகம் என்பதைத் தாண்டி, கட்சியில் அவரைச் சேர்த்துக்கொள்ள காங்கிரஸில் பலருக்கும் விருப்பமில்லை. காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், ஐ-பேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் தேர்தல் வியூகப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டதையும், அதற்காக பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத் சென்றிருந்தையும் காங்கிரஸ் கட்சியினர் ரசிக்கவில்லை. ஐ-பேக் நிறுவனத்துடன் தற்போது தனக்குத் தொடர்பு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறிவந்த நிலையில் அவர் அங்கு நேரடியாகச் சென்றது குறித்து காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான அவரது உறவும் காங்கிரஸ் கட்சியினரின் அதிருப்திக்கு இன்னொரு காரணம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாஜகவின் கடும் முயற்சிகளையும் தாண்டி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மம்தா பானர்ஜிக்கு வியூகம் அமைத்துத் தந்தார். எனினும், அவரது வியூகங்கள், செயல்பாடுகளால் கட்சியில் பல சலசலப்புகள் ஏற்பட்டன. மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களை ஓரங்கட்டுவதாகவும், அதற்கு வழிகாட்டுவது பிரசாந்த் கிஷோர்தான் என்றும் சொல்லப்பட்டது. பிரசாந்தின் யோசனைப்படிதான், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்று அபிஷேக் பானர்ஜி பேச ஆரம்பித்தார் என்றும் புகார்கள் எழுந்தன. பின்னர் அதை மம்தா பானர்ஜி ஒருவழியாகச் சமாளித்தார். எனினும், கோவா சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழுவினரின் செயல்பாடுகள் அம்மாநில திரிணமூல் காங்கிரஸாரைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தின. ஐ-பேக் குழு தங்கள் கட்சி வேட்பாளர்களைக் கைவிட்டுவிட்டதாக அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கிரண் கண்டோல்கர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் என்டிடிவி ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கும் மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோருடனான உறவை திரிணமூல் காங்கிரஸ் தொடர்வதாக உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். “பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு குறித்த கருத்து வேறுபாடுகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் ஏற்பட்டன. ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் எனும் முறையில் அவருடனான உறவைக் கட்சி தொடரும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவது குறித்த பரிசீலனையில் இருக்கும் பிரசாந்த் கிஷோர், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in