நிதிஷ்குமார் மீது மக்களின் கோபம்; அதனால்தான் இடைத்தேர்தல் தோல்வி: பிரசாந்த் கிஷோர் சீற்றம்

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிஹாரில் சமீபத்தில் நடைபெற்ற குர்ஹானி இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது 'மகாகத்பந்தன்' அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தின் பிரதிபலிப்பு என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

மாநிலத்தில் 3,500 கி.மீ தூரம் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பிரசாந்த் கிஷோர், பிஹாரில் பரவலான ஊழலால் மக்கள் சலிப்படைந்திருப்பதாகக் கூறினார். மோதிஹாரியில் (கிழக்கு சம்பாரண்) கோடாசஹான் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "மகாகத்பந்தன் அரசின் செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. கடந்த பல நாட்களாக மக்களுடன் நான் தொடர்பு கொண்டு வருகிறேன், என்னால் சொல்ல முடியும். மாநிலத்தில் நிலவும் ஊழலால் அவர்கள் சலிப்படைந்துள்ளனர். குர்ஹானி இடைத்தேர்தல் முடிவு என்பது, நிதிஷ் குமார் மீதான மக்களின் கோபத்தின் பிரதிபலிப்பாகும்.

டிசம்பர் 5-ம் தேதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குர்ஹானியில் தேர்தல் பிரச்சாரத்தை நிதிஷ் குமார் தொடங்கியபோது ஆத்திரமடைந்த மக்கள் போராட்டங்கள் செய்தனர். அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். முதல்வர் மீதான மக்களின் கோபம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் கூட உள்ளது. பாதுகாவலர்கள் இல்லாமல் முதலமைச்சரால் எங்கும் நடக்க முடியாது" என்று கூறினார்.

டிசம்பர் 8ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பிஹாரின் குர்ஹானி சட்டமன்ற தொகுதியை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திடமிருந்து எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in