குஜராத் தேர்தல்: காங்கிரஸுக்காக வியூகம் அமைக்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் வியூகம் அமைக்க ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்காக ராகுல் காந்தியிடம் அவர் பேசியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2014 மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூகம் அமைத்துத் தந்ததன் மூலம் பேசப்பட்ட பிரசாந்த் கிஷோர், பின்னர் அர்விந்த் கேஜ்ரிவால், நிதீஷ் குமார், அமரீந்தர் சிங், கே.சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வெற்றிக்கு வழிவகுத்தவர். வெகு சில தேர்தல்களில் அவரது வியூகம் கைகொடுத்ததில்லை. நடந்துமுடிந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவர் வகுத்துத் தந்த வியூகம் பலனளிக்கவில்லை. எனினும், இன்றும் அவர் வகுத்துத் தரும் திட்டங்களுக்கு அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் அங்கம் வகித்த பிரசாந்த் கிஷோர், பின்னர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது உள்ளிட்ட காரணங்களால் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியிலேயே சேர முயன்ற அவர், கட்சித் தலைமை அதிக ஆர்வம் காட்டாததால், அந்த முடிவைக் கைவிட்டார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதையும் அவர் வலியுறுத்திவருகிறார்.

இந்தச் சூழலில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக வியூகம் அமைத்துத் தர அவர் முன்வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸுக்காகப் பணிபுரிய பிரசாந்த் கிஷோர் தயாராக இருப்பதை, குஜராத் காங்கிரஸாரும் விரும்புவதாகவே தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 22), குஜராத் காங்கிரஸாருடன் ராகுல் காந்தி நடத்திய கூட்டத்தில் இதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ராகுல் காந்தி இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரசாந்த் கிஷோரும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது கவனம் ஈர்த்தது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் பாஜக, அடுத்த கட்டமாக குஜராத் தேர்தலில் கவனம் குவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in