`பிரசாந்த் கிஷோர் செல்லாக்காசு; காங்கிரசில் சேர்க்காதீங்க'- குமரியிலிருந்து எழும்பும் குரல்

`பிரசாந்த் கிஷோர் செல்லாக்காசு; காங்கிரசில் சேர்க்காதீங்க'- குமரியிலிருந்து எழும்பும் குரல்
ஆர்.எஸ்.ராஜன்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை விமர்சித்ததால் பதவி பறிப்புக்கு உள்ளானார் காங்கிரஸ் மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்த ஆர்.எஸ்.ராஜன். அதன்பின்னும் அவர் அடங்கவில்லை. விக்கிரமாதித்யன் தோளில் ஏறிக்கொண்ட வேதாளம்போல் மீண்டும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் ஆர்.எஸ்.ராஜன்.

அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த சிலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களையும், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸார் சிலரையும் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தற்காலிகமாக கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால் மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் நீக்கியது செல்லாது என்று அறிக்கைவிட்டு கட்சி கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நபர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்படுவதாக அண்மையில் குண்டைத் தூக்கிப் போட்டார் ஆர்.எஸ்.ராஜன். இதனால் அவரை விவசாய அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில் இப்போது பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கவே கூடாது என சோனியா காந்திக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் ஆர்.எஸ்.ராஜன். இதுகுறித்து காமதேனு இணையதளத்திடம் ஆர்.எஸ்.ராஜன் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, விமர்சித்ததால் என் பதவியைப் பறித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. இன்னும், என்னிடம் இருந்து பறிப்பதற்கு அவர்களிடம் பொறுப்பு எதுவும் இல்லை. ஆனால் இப்போதும், காமராஜரின் தொண்டராக காங்கிரஸ் வளர்ச்சிக்கு பேச வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதாகவே நம்புகிறேன்.

பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்குவதற்கு திட்டமிடுவது அதிர்ச்சியளிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியில் இருந்தே விரட்டப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். சாதி அடிப்படையில் இந்தியாவில் அரசியல் செய்ய நினைக்கிறார் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ் இவரை சேர்த்துக்கொண்டு பதவிகொடுத்தால் காங்கிரஸ் மேலும் பலவீனமடையும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இது காங்கிரஸை இன்னும் பலவீனப்படுத்தும்.

பணத்திற்காக அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரை, வியூக நிபுணராக மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர, கட்சிக்குள் பொறுப்புக்கு கொண்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். பிரசாந்த் கிஷோரைப் போலவே சுனில், ஜான், ரங்கேஸ், கிரீஸ் போன்ற எண்ணற்ற வியூக நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் தேர்தல் நேர வியூகத்திற்கு பயன்படுத்தவேண்டும். அதைவிட்டுவிட்டு செல்லாக்காசாக ஒரு மாநில கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுப்பது காங்கிரஸுக்கு வெட்கக்கேடான செயல். தேசியத் தலைவர்கள் இதைப் பேச தயங்குவதால்தான் நான் பேசுகிறேன். இதையே சோனியா காந்திக்கு கடிதமாகவும் எழுதியுள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.