ஆபாச வீடியோ; கவுடா கூட்டணிக்கு வேட்டு வைத்த பேராண்டி பிரஜ்வல்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகாவில் ஒட்டுமொத்த பாஜக கூட்டணியின் வெற்றிக்கே வேட்டு வைத்திருக்கிறார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் (ஜேடிஎஸ்) எம்பி-யான பிரஜ்வல் ரேவண்ணா. இவரின் ஆபாச வீடியோவில் சிக்கி இருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்ற தகவல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவால் கடந்த 1999-ல் துவங்கப்பட்டது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி. தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த கட்சி தேவகவுடாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவுடன் சுருங்கி போனது. 2004-ல் மகன் எச்.டி.குமாரசாமியை அவர் முதலமைச்சராக பதவியில் அமர்த்தியதால் அதிருப்தி அடைந்த சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கர்நாடகத்தில் 19 எம்எல்ஏ-க்கள், ஒரு எம்பி, கேரள மாநிலத்தில் 2 எம்எல்ஏ-க்கள் இதுதான் ஜேடிஎஸ் கட்சியின் இப்போதைய கையிருப்பு. இனிமேல் இதுவும் கையில் தங்குமா தங்காத என்ற மிகப்பெரும் கேள்வியை உண்டாக்கி இருக்கிறது தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச லீலை சர்ச்சை.

மோடி, தேவ கவுடா உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா
மோடி, தேவ கவுடா உள்ளிட்டோருடன் பிரஜ்வல் ரேவண்ணா

மக்களவைத் தேர்தல் கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 26-ம் தேதி முதல் கட்ட தேர்தலின் போது பிரஜ்வல் குறித்த ஏராளமான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பிரஜ்வலின் இந்த வீடியோக்களை வீடு வீடாக எடுத்துச் சென்று வாக்காளர்களிடம், ”இவருக்காக உங்கள் வாக்கு?” என்று கேள்வி கேட்டது.

பிரஜ்வலின் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் திடீரென பிரஜ்வல் தலைமறைவானார். அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிறார்கள். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது போலீஸ். என்றபோதும் 7-ம் தேதி, சிறப்பு விசாரணைக்குழு முன்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராவேன் என்று தனது வக்கீல் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார் பிரஜ்வல்.

பாலியல் புகார்கள் - ஆபாச வீடியோக்கள்
பாலியல் புகார்கள் - ஆபாச வீடியோக்கள்

மாநில அரசு இந்த விவகாரத்தை ஏன் இத்தனை நாட்கள் தள்ளிப் போட்டது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பிரஜ்வல் மீது பல்வேறு பாலியல் புகார்கள் இருப்பதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கக் கூடாது என கட்சிக்குள் இருந்தே கலகக்குரல் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தேவகவுடாவும் பிரஜ்வலின் சித்தப்பாவும் ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான குமாரசாமி அவருக்கு ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.

சித்தராமையா சிவக்குமார்
சித்தராமையா சிவக்குமார்

இந்தியாவில் ஒரு அரசியல்வாதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் ஒரே சமயத்தில் இப்படி கொத்தாக வெளியானது இதுவரை நடந்திராத நிகழ்வு. அந்த வகையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைகளில் வைத்திருந்த ஒருவர் மீதான இது போன்ற குற்றச்சாட்டுகள் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குமாரசாமி (கர்நாடகா) - மதச்சார்பற்ற ஜனதா தளம்
குமாரசாமி (கர்நாடகா) - மதச்சார்பற்ற ஜனதா தளம்

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆபாச வீடியோக்களில் இருக்கும் பெரும்பாலான பெண்கள், அரசு ஊழியர்கள் என்கிற தகவல் தான். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது துறை ரீதியாக தனது சித்தப்பா மற்றும் தந்தையை சந்திக்க வந்த பெண் அரசு ஊழியர்களை, பிரஜ்வல் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்.

இந்த வழக்கு இப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இருக்கிறது. விசாரணைகள் விரிவடையும் போது பிரஜ்வல் மீது குறைந்தபட்சம் 200 முதல் 300க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவதால் இது ஜேடிஎஸ் கட்சிக்கு மாத்திரமல்லாது அவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் பாஜகவுக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவின்போதே இந்த வீடியோக்கள் வெளியானதால், கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்

பெண்கள்
பெண்கள்

எனினும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் மூச்சுவிடாமல் இருக்கிறார். அதேசமயம், இந்த விவகாரத்தை காங்கிரஸும் பிற எதிர்க் கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதனிடையே, ஹாசனை சேர்ந்த 44 வயதான முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் பிரஜ்வல் தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு மிரட்டியே தொடர்ச்சியாக தனக்கு மூன்று ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பகீர் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 8 செக்‌ஷன்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் பிரஜ்வல் மீது முன்னதாக புகார் கொடுத்த 25 வயது பெண்ணைக் கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவகவுடா வீட்டில் இருந்து ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அரசியல் ரீதியாக மட்டுமின்றி ஆபாச வீடியோ விவகாரம் சமூக ரீதியாகவும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கர்நாடகாவில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ’ஒக்கலிகர்’ சமூகத்தை சேர்ந்தவர் பிரஜ்வல். அவர் மீதான இந்த புகார்கள், கர்நாடக அரசியலில் வேறுவிதமான தாக்கங்களையும் உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, இந்த விவகாரமே, ஒட்டுமொத்தமாக ஜேடிஎஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழப்பதற்கான வாய்ப்பாகவும் அமையலாம்.

மே 7-ம் தேதி கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரத்தை இன்னும் ஊதிப் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது காங்கிரஸ். பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்க வேண்டும் என்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அதேசமயம், அடுத்தடுத்து புகார்கள் குவிவதால் பிரஜ்வலை கைதுசெய்யும் நடவடிக்கை யிலும் தீவிரமாக இருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு. இதையறிந்து, பிரஜ்வல் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஹாசன் நீதிமன்றத்தில் 3-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இரண்டாம்கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக கர்நாடகாவுக்குள் நுழைந்தால் தன்னை கைது செய்து அதன் மூலம் ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கும் என்பதாலேயே, 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகச் சொல்லி இருக்கிறார் பிரஜ்வல்.

அப்படி அவர் ஆஜராகும் போது கர்நாடகாவில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிந்திருக்கும்; பிரஜ்வலுக்கு எதிரான பிரளயம் வெடித்திருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in