தட்டிக் கேட்க தைரியம் இல்லாத அரசு; - திமுக அரசுக்கு எதிராக தகிக்கும் பி.ஆர். பாண்டியன்!

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் ஒருபோக சாகுபடிக்குக்கூட வழி இல்லாமல் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கடந்த பருவத்தில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உற்பத்தி வெகுவாக குறைந்து அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது

மேகேதாட்டு
மேகேதாட்டு

விவசாயம் பொய்த்துப் போவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாங்கிய விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை மேட்டூரில் பாதி அளவுகூட தண்ணீர் இல்லை.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் பிடிவாதமாக மறுத்துவரும் நிலையில் இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பயிர் செய்ய இயலுமா என்ற கேள்வி மிகப்பெரிதாக எழுந்துள்ளது.  மேகேதாட்டு அணை விவகாரம், காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையைப் பெறுவது போன்ற காவிரி குறித்த விவகாரங்களில் திமுக அலட்சியம் காட்டிவருவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார்.  அவரிடம் இதுகுறித்து பேசினோம்.

இந்த ஆண்டு தமிழகத்தில்  விவசாயம் எப்படி இருக்கும்?

கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடோ, பயிர்க் காப்பீட்டுத் தொகையோ கிடைக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், இந்த ஆண்டு  குறுவைப்பயிர் சாகுபடி தொடங்க வேண்டிய காலகட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஆனால், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் தமிழக அரசால் செய்யப்படவில்லை. காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர முடியுமா... பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல்கள் எதிலும் மாநில அரசு இதுவரை இறங்கவில்லை. 

கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்ற வறட்சி ஏற்பட்டபோது இலவசமாக விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய தனியார் டிராக்டர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் கோடை உழவுசெய்து நிலத்தைத் தயார்செய்து வைத்திருந்த விவசாயிகள், ஆடிப்பட்டம் வந்தபோது நேரடி விதைப்பு செய்ய்தார்கள். அதுபோன்ற முடிவுகள் எதையும் மாநிலஅரசு தற்போது வரை அறிவிக்கவில்லை. அதனால்  இந்த அரசு தங்களைக் காக்குமா... அல்லது கைவிடுமா என்று தெரியாமல் விவசாயிகள் குழப்பிப் போயுள்ளனர்.

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து நீங்கள் அதிகம் விமர்சிக்கிறீர்களே..?

மேகேதாட்டு அணை விவகாரத்தில்  தமிழ்நாடு  காட்டிய அலட்சியம் தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை வரைவுத்திட்டம் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறியபோது எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள், அதன்பின்னர்,  கர்நாடக அரசின் வரைவுத்திட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மத்திய அரசின்  நீர்வள ஆணையத்துக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசு பிரதிநிதிகள் சொன்னதை எதிர்க்கவில்லை.

அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில்  கருத்தும் தெரிவிக்கவில்லை; வெளிநடப்பும் செய்யவில்லை.  அதனால் காவிரி ஆணையம் மேகேதாட்டு அணை குறித்து முடிவெடுக்க மத்திய அரசின்  கையில் சட்டவிரோதமாக அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான சதி திட்டத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது. காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு அரசியல் சுயலாபத்துக்காகச் செயல்படுகிறது.

அதனால் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அல்லது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால், மூன்று மாத காலமாகியும் தமிழ்நாடு அரசு அதைச் செய்யவில்லை.

இதில் அதிமுக அரசு தேவலாம் என்று பேசியிருக்கிறீர்களே..?

கடந்த அதிமுக ஆட்சியின்போது மேகேதாட்டு அணை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்பதை எடப்பாடி பழனிசாமியால் உறுதியாக கூறமுடிந்தது.  அவரது சட்டபூர்வமான செயல்பாடுகளால் இதில் முடிவு எடுக்கும் உரிமை தங்களுக்குக் கிடையாது என பிரதமர் வாயாலேயே அவர் கூறவைத்தார். அந்த உரிமையை தற்போது தமிழக அரசு தவற விட்டுள்ளது. இந்த விவகாரத்தை மீண்டும் மத்திய அரசின் முடிவுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. 

இதற்குப் பின்னணியில் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் ஆதரவாக இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த காலங்களில் கர்நாடகத்தில் அணைகளைக் கட்டவிட்டதும் திமுகதான். தற்போது மேகேதாட்டு அணை கட்டுவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளதும் திமுகதான். “இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகேதாட்டு அணையை கட்டுவோம்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ள நிலையில் அக்கூட்டணியை அமைக்க காரணமாக இருந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் இதுவரை ஏன் அதை மறுத்தும், கண்டித்தும் கூறவில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

கர்நாடகத்தில் உள்ள தங்களது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில்  தமிழகத்தைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் இந்த விவகாரத்தில் தமிழக நலனை காவுகொடுக்கிறார்களோ என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் உண்மையிலேயே சரியில்லையா என்கிறீர்களா?

ஆம்! திமுக அரசைவிட அதிமுக அரசு இந்த விஷயத்தில் எவ்வளவோ தேவலாம். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு உரிமைகள், தீர்ப்புகள், முடிவுகளை அவர்கள் பெற்றார்கள். அதையெல்லாம் இழக்கும் வகையில் திமுக அரசு நடந்துகொள்கிறது; அலட்சியம் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு செய்யும் தவறுகளையும், தமிழ்நாட்டுக்கான துரோகங்களையும் தட்டிக்கேட்கவும் தைரியமில்லாத அரசாக இது இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in