அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால்,  இரண்டு உதவிப் பொறியாளர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார். அவர் படித்த காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தான் படித்த பள்ளி என்பதால் அந்த நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டார் அமைச்சர் துரைமுருகன். அதே உற்சாகத்தோடு மைக் பிடித்த துரைமுருகன், “என் உயிரோடு உதிரத்தோடு மனநிறைவுடன் இருக்கின்ற பள்ளி இந்தப் பள்ளி. இந்த வழியாக நான் செல்லும் போது இந்த பள்ளியைப் பார்க்காமல் போக மாட்டேன்” எனப் பேசும் போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரத்தை கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் இரண்டு முறை மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்துள்ளார். அப்போதும் மின்சாரம் வராததால் அருகிலிருந்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார் செல்போனை வாங்கிப் பேசினார். அப்போதும் மின்சாரம் வராத காரணத்தால் ஒரு சிலருக்கு மட்டும் மிதிவண்டியைக் கொடுத்துவிட்டு அமைச்சர் வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினார். இதனால் கட்சியினரையும், அதிகாரிகளையும் அமைச்சர் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வெட்டுக்குக் காரணமான அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய அமைச்சர் தரப்பிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. இந்நிலையில் உதவிப் பொறியாளர்கள் ரவிகிரண் மற்றும் சிட்டிபாபு ஆகியோர் வடுவன்தாங்கல் துணை மின்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in