இலங்கை அரசு தொலைக்காட்சியின் மின்சாரம் துண்டிப்பு: மின்கட்டணம் செலுத்தாததால் அதிரடி

இலங்கை அரசு தொலைக்காட்சியின் மின்சாரம் துண்டிப்பு: மின்கட்டணம் செலுத்தாததால் அதிரடி

இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாஹினியின் மின்சார விநியோகம் மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமானோர் வேலை இழந்தனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. பலர் பட்டினியால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இதற்குக் காரணமான ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று பல மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் தப்பி மாலத்தீவு சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றவர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை அரசின்தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை மின்சார சபை அதிகாரிகள் குழு இன்று துண்டித்துள்ளது. இலங்கையில் பல மில்லியன் ரூபாய் வரையில் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனம் மின்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மின்சார சபையுடன் மின்சார விநியோகத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மின்சார சபையின் இந்த நடவடிக்கை இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in